தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி முதல் போராட்டத்தை தொடங்கினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் நடந்து வந்த போராட்டத்தில், விவசாயிகள் பலர் கலந்து கொண்டர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி, நதிகளை இணைப்பது, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தனர். சுமார் 42-நாட்கள் நீடித்த இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், சினிமா பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதேனிடையே தமிழக பொதுநல வழக்காடு மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா அமர்வு கடந்த ஏப்ரல்-13-ந் தேதி விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நீதிபதிகள் தெரிவிக்கையில், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. விவசாயிகள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக தமிழக அரசு இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் தமிழகத்தில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை. தற்கொலை செய்ததாக கருதப்படுபர்கள் தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காவே தற்கொலை செய்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு, தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.623 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் அபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கானது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. முக்கித்துவம் வாய்ந்த வழக்குகள் குறித்த விசாரணையை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றம் செய்வது வழக்கம்.
தமிழக அரசு. உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள இந்த பதிலானது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அமைந்துள்ளது.