அதிமுகவுக்கு பொது செயலாளர் இல்லை... தேர்தல் கமிஷன் அறிவிப்பால் சசி அணி அதிர்ச்சி

ஒவ்வொரு கட்சியையும் குறிப்பிட்டு அந்த கட்சியின் தலைவர் பெயரையும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளது. ஆனால் அதிமுகவுக்கு அனுப்பிய கடிதத்தில், அதன் பொது செயலாளர் பெயர் இல்லை.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வாக்கு சீட்டு முறைக்கு விடை கொடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. வாக்கு பதிவு இயந்திரம் மூலம் நடைபெறுகிறது.
உ.பி. தேர்தல் முடிவுக்கு பின்னர் வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து ஆளும் பிஜேபி அரசு வெற்றி பெற்றுவிட்டதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி புகார் கூறினார். இந்த புகாரை காங்கிரஸ் கட்சியும் ஆமோதித்தது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு வாக்கு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்ததே காரணம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். அதோடு டெல்லி சட்டசபையில், வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பரத்வாஜ் நேரடியாக செய்து காட்டினார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வரும் 12ம் தேதி தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, வாக்கு இயந்திரம் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளது. அப்போது யார் வேண்டுமானாலும் வாக்கு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என்பதை நிருபிக்கலாம் என்று கூறியுள்ளது.
இது குறித்து அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்தில் இருந்து அழைப்பு அனுப்பியுள்ளது. அதில் ஒவ்வொரு கட்சியையும் குறிப்பிட்டு அந்த கட்சியின் தலைவர் பெயரையும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளது. ஆனால் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் திகழும் அதிமுகவுக்கு அனுப்பிய கடிதத்தில், அதன் பொது செயலாளர் பெயர் இல்லை. அதே போல அங்கிகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் பட்டியலில் அதிமுக பெயர் இருந்தாலும், பொது செயலாளர் பெயர் இல்லாமலேயே தேர்தல் கமிஷன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.
அதிமுகவின் பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்த பின்னர், கட்சி சசிகலா தலைமையில் ஒர் அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியாகவும் பிரிந்துள்ளது. கட்சியின் சின்னம் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் தங்களுக்கே தொண்டர்கள் ஆதரவு இருப்பதாக சொல்லி வருகிறார்கள். தேர்தல் கமிஷனில் பிரமாண வாக்குமூலங்களை பெற்று ஒப்படைத்து வருகின்றனர்.
தேர்தல் கமிஷன் முடக்கி வைத்த சின்னத்தை மீட்க 50 கோடி ரூபாய் வரையில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஏற்கனவே சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில் 12ம் தேதி நடைபெறும் தேர்தல் கமிஷன் கூட்டத்தில் யார் கலந்து கொள்வார்கள்? ஓபிஎஸ் அணியா? அல்லது சசிகலா அணியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது குறித்து ஓபிஎஸ் தரப்பு தலைவர் ஒருவரிடம் பேசிய போது, ‘சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்ததை தேர்தல் கமிஷன் அங்கிகரிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. சசிகலா நியமனமே செல்லாது என்கிற போது டிடிவி.தினகரனை துணைப் பொது செயலாளராக நியமித்ததும் செல்லாது. நாங்களே உண்மையான அதிமுக என்பதை நிருபிப்போம்’ என்றார்.
சசிகலா அணியினருக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் கமிஷன் நடத்த உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள இரு அணிகளும் தீவிரமாக உள்ளன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close