நீட் விவகாரம், கலந்தாய்வு என பல பிரச்சனைகளுக்கு அப்பால் தமிழகத்தில் கடந்த திங்கள் கிழமை முதல் எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல மருத்துவக் கல்லூரிகளில், லெக்கிங்ஸ், ஜெகிங்ஸ், ஜீன்ஸ் உள்ளிட்ட இறுக்கமான உடைகளை மாணவிகள் அணியக்கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ கூறுகையில், “இந்த விதிமுறைகள் குறித்து மருத்துவக் கல்லூரிகளுக்கு வாய்மொழியாகவே கூறியுள்ளோம். இதுகுறித்து சுற்றறிக்கை எதுவும் கல்லூரிகளுக்கு அனுப்பப்படவில்லை. கல்லூரிகளில் குறிப்பிட்டுள்ள உடைகளை மட்டுமே மாணவ, மாணவிகள் அணிந்து வர வேண்டும்.”, என கூறினார்.
மாணவிகள் சுடிதார் உடையிலும், மாணவர்கள் சட்டை, பேண்ட் அணிந்தும் வர வேண்டும்.
”ஜெக்கிங்ஸ், லெக்கிங்ஸ், ஜீன்ஸ் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகளை கல்லூரிக்குள் அணிந்து வரக்கூடாது. முதல் நாள்வகுப்பிலேயே இதுகுறித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.”, என சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியின் தலைவர் கூறினார்.
பெரும்பாலான மாணவிகள் சேலை அணிவதை அசௌகரியமாக உணருவதால், அவர்கள் சுடிதார் உடையை பெரும்பாலும் அணிவார்கள் என மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தெரிவித்தார். இறுக்கமான ஜீன்ஸ் உடைகள் மாணவர்கள் அணிந்து வரவும் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஆடை கட்டுப்பாட்டை மீறும் மாணவர்களுக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்பட மாட்டாது எனவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: பெண்கள் இறுக்கமான, லேசான ஆடைகள் அணிய தடை: சவுதி ஏர்லைன்ஸ் அறிவிப்பு