அமைச்சர்கள் யாரும் சசிகலாவை தொடர்பு கொண்டு பேசவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளேபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை பார்ப்பதற்காக, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா நாள் பரோலில் வெளிவந்தார். 5 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா, சென்னை தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கி, மருத்துவமனையில் உள்ள அவரது கணவரை சந்தித்துவந்தார். சசிகலாவிற்கு வழங்கப்பட்ட 5-நாள் பரோல் இன்றுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, அமைச்சர்கள் சசிகலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அது முழுக்க முழுக்க பொய்யான தகவலாகும். சசிகலாவை தொடர்பபு கொண்டு பேசும் எண்ணம் யாருக்கும் இல்லை. முன்னதாக எந்த முடிவு எடுக்கப்பட்டதோ அந்த முடிவு தான் இன்று வரை உள்ளது. இன்று எப்படி இருக்கிறதோ இதே போன்று தான் பின்வரும் நாளில் இருக்கும்.
குட்கா விவகாரத்தில் முகாந்திரம் உள்ளவர்கள் 18 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழலில் திழைத்த கட்சியான திமுக, அதிமுக அரசை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை. டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், டெங்கு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்ற மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. தமிழக மக்கள் அரசோடு இணைந்து செயல்பட்டு டெங்கு காய்ச்சல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.