‘மெர்சல்’ படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், அவற்றை நீக்கத் தேவையில்லை என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்றுவரும் தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக இடம்பெற்றுள்ள பா.இரஞ்சித், செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி குறித்த காட்சிகளை நீக்கத் தேவையில்லை. அந்த வசனங்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது” என்று பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவின் திட்டங்களை எதிர்மறையாக விமர்சித்திருப்பதால், அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர். கூடுதலாக, சம்பந்தப்பட்டக் காட்சிகளை நீக்காவிட்டால், படத்தின் மீது வழக்கு தொடர்வோம் என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இன்னொரு பக்கம், விஜய்க்கு பொருளாதார அறிவு கிடையாது என்று விமர்சித்துள்ள ஹெச்.ராஜா, ‘ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்புதான் ‘மெர்சல்’ என்று மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
பாஜக எதிர்க்கிறது என்பதாலேயே காங்கிரஸ் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறது. திருநாவுக்கரசர், குஷ்பூ உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகவும், பாஜகவை விமர்சித்தும் கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித்தின் கருத்து அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.