அக்டோபர் 6 முதல் புதிய தமிழ்ப் படங்கள் எதையும் ரிலீஸ் செய்வதில்லை என தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்தியாவில் சினிமா செழித்து வளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமானது. சினிமா மீது மக்களுக்கு இருக்கும் மோகமே அதற்கு பிரதான காரணம்! 20 வருடங்களுக்கு முன்பு இருந்த அளவுக்கு இல்லையென்றாலும், இன்று வரை கடைசி கிராமங்கள் வரை திரையரங்குகளின் தாக்கம் அதிகம்!
இந்தத் திரையரங்குகள் மூலமாக கிடைக்கும் கேளிக்கை வரிதான் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று பிரதான வருமானம்! அதாவது, சினிமா வசூலில் 10 சதவிகிதம் வரை கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்கிற அம்சமாக, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதர மாநிலங்களில் தனியாக கேளிக்கை வரி அதிகமாக இல்லாததால், ஜி.எஸ்.டி. வரியை ஏற்பதில் அவர்களுக்கு பெரிய பிரச்னை இல்லை. ஆனால் தமிழகத்தால் ஜி.எஸ்.டி. வரியையும் தவிர்க்க முடியவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கும் பிரதான வருமானமான கேளிக்கை வரியையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை.
இதனால்தான் கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி தமிழ் சினிமாத் துறையினர் முன்வைத்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இது தொடர்பாக குழு அமைப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது என காலம் கடத்தி வருகிறது.
ஆனால் ஜி.எஸ்.டி. வரி, கேளிக்கை வரி என மொத்தம் 40 சதவிகிதம் வரியை செலுத்த தமிழ் திரையுலமும் தயாரில்லை. எனவே கேளிக்கை வரிக்கு எதிரான போராட்டத்தை இன்னும் அதிகப்படுத்த திரையுலகம் முடிவு செய்திருக்கிறது. இதற்கான போராட்டத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து முன்னெடுக்கின்றன.
இந்த சங்கங்களின் இணைந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (4-ம் தேதி) சென்னையில் நடந்தது. கூட்டம் முடிவில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் நிருபர்களிடம் கூறுகையில், ‘40 சதவிகித வரியை கட்டுகிற சூழலில் தமிழ் சினிமா இல்லை. இப்படி வரி வசூலித்து, தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டிவிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி அக்டோபர் 6 முதல் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில்லை என முடிவு செய்திருக்கிறோம். கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும். இதில் திரையுலக அனைத்து சங்கங்களும் இணைந்து நிற்போம்’ என கூறினார்.
இதனால் அக்டோபர் 6 முதல் ரிலீஸாகவிருந்த சுமார் 10 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது என தெரிகிறது. பழைய படங்கள் தொடர்ந்து தியேட்டர்களில் திரையிடப்படும்.