15 நாட்கள் பரோல் வழங்கக் கோரிய சசிகலாவின் மனுவை கர்நாடாக சிறைத்துறை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, ஜெ.வின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தனி நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். கர்நாடக உயர்நீதிமன்ற அப்பீலில் நீதிபதி குமாரசாமி விசாரித்து, மேற்படி நால்வரையும் விடுவித்தார். பின்னர் உச்சநீதிமன்றம், குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது.
ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அவருக்கு இந்த வழக்கில் தண்டனை அறிவிக்கப்படவில்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பு தொடர்பாக சசிகலா தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி பலர் அவரை சந்தித்ததாகவும், சசிகலாவே விதிகளை மீறி சிறையை விட்டு வெளியேறியதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதனால் தனது நெருங்கிய உறவினர்கள் ஓரிருவர் இறந்த தருணங்களில்கூட சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்க வில்லை. அரசியல் ரீதியாக அவரது அணிக்கு தமிழகத்தில் பின்னடைவு ஏற்பட்ட தருணங்களிலும் அவர் தமிழகம் வர முயற்சிக்க வில்லை.
இந்தச் சூழலில் சசிகலாவின் கணவர் ம.நடராஜன், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கல்லீரம், கிட்னி, நுரையீரல் ஆகியன பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை தேவை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் மாற்று கல்லீரல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்காக முறைப்படி அரசு அமைப்பில் பதிவு செய்து காத்திருக்கிறார் ம.நடராஜன். மாற்று கல்லீரல் கிடைத்ததும் உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய டாக்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.
நடராஜன் உடல் நிலையைத் தொடர்ந்து, சிறையில் இருந்து பரோலில் வெளியே வர முடிவெடுத்தார் சசிகலா. 15 நாட்கள் பரோல் கேட்டு கர்நாடக சிறை நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தார். விடுமுறை காரணமாக அவரது விண்ணப்பத்தை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சசிகலாவின் மனுவை கர்நாடாக சிறைத்துறை இன்று(செவ்வாய்கிழமை) தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பரோல் கோரி தாக்கல் செய்த மனுவுடன் வழங்கப்பட்ட ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ள கர்நாடக சிறைத்துறை, உரிய காரணங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்ய சசிகலாவிற்கு அறிவுறுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.