முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு கட்சியிலும் ஆட்சியிலும் உரிய முக்கியத்துவம் இல்லை என அவரது ஆதரவாளர்கள் குமுறி வருகிறார்கள். இந்தச் சூழலில் அண்மையில் டெல்லி சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி.யை மட்டும் உடன் அழைத்துச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே பனிப்போர் நடப்பதாக செய்திகள் பரவின.
இந்தச் சூழலில் இன்று திருச்சியில் கல்வி அமைச்சரும், அதிமுக சீனியர்களில் ஒருவருமான செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே எந்த கருத்து வேறுபாடு இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வி வளர்ச்சிக்காக சிறப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் 2 மாதத்திற்குள் முடிக்கப்படும். இந்தியாவிலேயே முதன் முறையாக மாணவ-மாணவிகளுக்கான விபத்து காப்பீடு திட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வரும் பொது தேர்வுகளை மாணவர்கள் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில் 412 பயிற்சி மையங்கள் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் 3 ஆயிரம் பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. இதற்காக தலா ரூ.2 லட்சம் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது.’ இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.