போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டது என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே மூன்று கட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தனர். இதனிடையே, தமிழக அரசுடன் அந்த அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வருடன் ஈரோட்டில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வர் அளித்த நம்பிக்கையை தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த அமைப்பின் சில பிரிவுகள் அறிவித்தன. ஆனால், அதற்கு பெரும்பாலானோர் ஆதரவளிக்கவில்லை. அதேசமயம், அந்த அமைப்பின் சில பிரிவுகள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவித்தனர். அதன்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ஜாக்டோ ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. எனினும், தங்களது போராட்டத்தை கைவிடாமல் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், மாணவி அனிதா மரணத்திற்குப் பிறகு நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மத்தியில் குழப்பமும், பயமும் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை நினைத்து வேதனையில் உள்ளனர். எனவே, மனதளவில் குழப்பத்தில் உள்ள மாணவர்களுக்கு உளவியல்ரீதியான ஆலோசனைகளை வழங்க சிறந்த நிபுணர்களை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த போராட்டத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட நேரிடும். நீதிமன்ற உத்தரவை விமர்சிக்கும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? எத்தனை ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன? என்பன உள்ளிட்ட 12 கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், வேலைநிறுத்த நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாக கருதப்படும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டது. போராட்டம் தொடர்பாக 43,508 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன என்பன உள்ளிட்ட நீதிபதியின் 12 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.