தமிழனுக்கு நாதியும், நீதியும் இல்லாத நிலையை நீடிக்க விடமாட்டோம் என ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டார்.
ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் 36 ஆவது அமர்வில் பங்கேற்று வருகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை.
முதல் உலகப் பெரும்போர் முடிந்தவுடன், உலகில் போரைத் தவிர்க்கவும், சமாதானத்தை நிலைநாட்டவும் League of Nations நாடுகளின் கூட்டமைப்பு, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நிறுவப்பட்டது. 1933 இல் தொடங்கி 35 க்குள், பிரமாண்டமான அரங்கங்கள் கட்டடங்கள் கட்டி எழுப்பப்பட்டன. ஆனால், ஜெர்மனியின் சர்வாதிகாரியாக அடால்ப் ஹிட்லர் உலகப் போரைத் தொடுத்த பிறகு, இந்த லீக் ஆ~ப் நேசன்ஸ் செயல் அற்றுப் போனது.
இரண்டாம் உலகப் போர் முடிந்தபிறகு, மீண்டும் உலகில் சமாதானத்தை நிலைநாட்ட, ஐக்கிய நாடுகள் சபை என்ற புதிய அமைப்பு இதே கட்டடங்களில் தொடங்கப்பட்டது. பின்னர் இதன் தலைமையகம், அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் ஜெனீவாவிலும், ஐ.நா.வின் பொதுச்சபை கூடுவதற்காக இந்த அரங்கம் பயன்படுத்தப்படுகின்றது.
மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடைபெறுகின்ற அரங்கம், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் 75 கோடி ரூபாய் செலவில் ஸ்பெயின் நாட்டினர் புதுப்பித்தனர். ஆழ்கடலின் அடிவாரத்தில் உள்ள காட்சியை, முப்பரிமாணப் படமாக ஆக்கி, அந்தக் காட்சியை மேற்கூரை விதானத்தில் அமைத்துள்ளனர்.
ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், சீனம், ரஷ்ய, அரபு என ஆறு மொழிகளில் இங்கே பேசலாம். எந்த மொழியில் பேசினாலும், மற்ற ஐந்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் ஆறு கண்ணாடி அறைகளில் அமர்ந்து உள்ளனர். ஒரு சிறிய ஒலிபெருக்கியைக் காதில் பொருத்திக் கொண்டால் மொழிபெயர்ப்பைக் கேட்கலாம்.
மனித உரிமைக் கவுன்சிலில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. சுழற்சி முறையில் நாடுகள் இந்த அமைப்பில் இடம் பெறும். மனித உரிமைக் கவுன்சிலின் பிரமாண்டமான கட்டடத்தின் பக்கவாட்டில், சிறு சிறு கூட்ட அரங்குகள் உள்ளன. மனித உரிமைக் கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்று வாதங்களை நடத்த முடியாதவர்கள், இந்த அரங்கங்களில், தங்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் தனித்தனியாக விவாதங்களை நடத்துகின்றார்கள்.
196 நாடுகளும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிக்கும் இரண்டு நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசு சார்பு அற்ற, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஒன்றரை நிமிடம் ஒதுக்கப்படுகின்றது. மேடையில், மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவர், இயக்குநர், துணைத்தலைவர் அமர்ந்து இருக்கின்றார்கள்.
அந்த அரங்கத்தின் மேடையில், பின்புறம் மிகப்பெரிய திரையில், நிமிடமும், வினாடிகளும் பதிவுசெய்யப்படுகின்றன. இரண்டு நிமிடங்களுக்கு மேல் எந்த நாட்டவரும் பேச முடியாது. ஒலிபெருக்கி அணைக்கப்பட்டு விடுகின்றது. தொண்டு நிறுவனங்களின் சார்பில் உரை ஆற்றுவோர், ஒன்றரை நிமிடத்திற்கு மேல் பேச முடியாது.
மனித உரிமைகள் கவுன்சிலின் இயக்குநர் ஆடம்அப்துல் முல்லா, அண்மையில் இலங்கைக்குச் சென்று நிலைமைகளைக் கண்டறிந்து வந்துள்ளார். செப்டெம்பர் 19 ஆம் தேதி அவரை நான் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்துப் பேசினேன்.
தனி அரங்கு ஒன்றில், இலங்கை அரசு நடத்தும் நீதி விசாரணை என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் நான் பேசும்போது, ‘இலங்கையில் நீதி அழிக்கப்பட்டு விட்டது; மனித உரிமைக் கவுன்சிலிலும் 2009 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ராஜபக்சே அரசுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றி, நீதி புதைக்கப்பட்டது.
அனைத்து உலக அரங்கில் இன்று தமிழனுக்கு நாதியும் இல்லை, நீதியும் இல்லை. ஆனால், நிலைமை இப்படியே நீடிக்காது; நீடிக்க விட மாட்டோம். நீதியை நிலைநாட்டுவோம்.’ என்று பேசினேன்.
இவ்வாறு வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.