சசிகலாவை நீக்கப் போவதாக பெரும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் பிசுபிசுத்தது. ஒரு தீர்மானத்தில்கூட சசிகலாவுக்கு எதிரான வரிகள் இல்லை.
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் இணைந்ததும், அதிமுக.வில் பிரச்னை ஓய்ந்துவிட்டதாக பலரும் நினைத்தனர். ஆனால் அதன்பிறகுதான் பிரச்னை இன்னும் தீவிரமாகியிருக்கிறது. காரணம், 3 முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தால், 11 எம்.எல்.ஏ.க்களை தாண்டி தனது பக்கத்தில் திரட்ட முடியவில்லை. ஆனால் டிடிவி.தினகரன் எடுத்த எடுப்பிலேயே 19 எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக கவர்னரிடம் மனு கொடுக்க வைத்தார்.
அவர்களுக்கு சபாநாயகர் தனபால் மூலமாக நோட்டீஸ் அனுப்பிய பிறகும், பாண்டிச்சேரியில் முகாமிட்டிருக்கும் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக கூடுதலாக எம்.எல்.ஏ.க்கள் சிலர் இணைந்தவண்ணம் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இன்னும் எத்தனை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ‘ஸ்லீப்பர் செல்’களாக இருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
இந்தச் சூழ்நிலையில்தான் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டினார். ஆகஸ்ட் 28-ம் தேதி காலை 10 மணியளவில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வராதது எடப்பாடி - ஓ.பி.எஸ். தரப்புக்கு முதல் ஷாக்! இந்தக் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பு நிலவியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
‘ஒரு இடைக்கால ஏற்பாடாக சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் அவரால் நியமனம் செய்யப்பட்ட டிடிவி.தினகரன் கட்சியில் செயல்படுவது சட்டத்திற்கு புறம்பானது’ என முதல் தீர்மானத்தில் மட்டுமே சசிகலாவின் பெயர் வருகிறது. மற்ற 3 தீர்மானங்களில் சசிகலா குறித்து எதுவும் இல்லை.
முதல் தீர்மானத்திலேயே சசிகலாவை தாங்கள் நியமனம் செய்ததை, எடப்பாடி தரப்பும், ஓ.பி.எஸ். தரப்பும் இணைந்து ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்க வில்லை என்பதோடு நிறுத்திக்கொண்ட அந்தத் தீர்மானம், சசிகலா அந்தப் பொறுப்பில் செயல்பட முடியாது என வெளிப்படையாக கூறவில்லை. சசிகலாவை நீக்க இருப்பதாகவும் எந்த தொனியும் இல்லை. ‘சசிகலா நியமனம் செல்லாது’ என தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்காத நிலையில், அவரால் நியமனம் செய்யப்பட்ட டிடிவி.தினகரன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட இதர நிர்வாகிகளை எப்படி தவிர்க்க முடியும் என்பதையும் அந்தத் தீர்மானத்தில் விளக்கவில்லை.
அணிகள் இணைப்புக்கு ஓ.பி.எஸ். தரப்பு வைத்த முதல் நிபந்தனையே சசிகலா நீக்கம்தான். ஆனால் ஓ.பி.எஸ். இணைந்த பிறகு அவரது தலைமையில் நடந்த கூட்டத்திலும்கூட சசிகலாவை நீக்க முடியாதது ஓ.பி.எஸ். தரப்பு நிர்வாகிகளுக்கு பலத்த அதிர்ச்சி! கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பே தீர்மானங்களை வடிவமைத்தபோது இதை சுட்டிக்காட்டி ஓ.பி.எஸ். தரப்பினர் தங்களின் அதிருப்தியை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஓ.பி.எஸ். தரப்பை சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். ‘சசிகலாவை தேர்தல் ஆணையமே நீக்கட்டும். அல்லது பொதுக்குழுவில் முடிவு செய்து கொள்ளலாம். இப்போது அதை கிளறினால், ஆட்சிக்கு சிக்கல் உருவாகும்’ எனக் கூறி நிலைமையை ஓ.பி.எஸ். தரப்புக்கு புரிய வைத்திருக்கிறார்கள். காரணம் வடக்கு மற்றும் தெற்கு மண்டல அமைச்சர்கள் சிலரே சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்களாம்.
குறிப்பாக வடக்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு அமைச்சர், ‘சசிகலாவுக்கு மக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தி இருக்கிற காரணத்தை வைத்தே அவரை நீக்க நினைக்கிறோம். ஆனால் இந்த ஆட்சியை நிலைநிறுத்தியவர் அவர்தான். மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக கருதும் ஓ.பி.எஸ்., இந்த ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர். இரட்டை இலை முடங்க காரணமானவர். அவருக்காக சசிகலாவை அவமதிப்பது துரோகமாக இருக்கும். எனவே அவரை தேர்வு செய்த பொதுக்குழுவே அதில் இறுதி முடிவை எடுக்கட்டும்’ என கூறினாராம் அந்த அமைச்சர்.
மிகுந்த தயக்கத்துடனும், வேறு வழியில்லாமலும் இதை ஓ.பி.எஸ். தரப்பு ஏற்றுக்கொண்டது. அதனால்தான் நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் எதுவும் இல்லை. செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் சசிகலாவின் நியமனம் வாபஸ் பெறப்படும் என தெரிகிறது. பொதுக்குழுவிலும் அது அவ்வளவு சுலபமாக நடக்குமா? என்பது கேள்விக்குறி. எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி.தினகரனின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அதற்கான சாத்தியக்கூறுகள் அமையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.