தமிழகம் வந்த ராகுல் காந்தியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் நடிகை குஷ்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்ன்றன.
நடிகை குஷ்பு சினிமாவில் நடித்த போது, அவருக்காக கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் இருந்தார்கள். சினிமாவில் இருந்து விலகிய பின்னர் டி.வி. ஷோக்கள் நடத்தி வந்தார். அப்போது வார இதழ் ஒன்றுக்கு கற்பு பற்றி கருத்து சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவர் மீது தமிழகம் முழுவதும் பல கோர்ட்டுகளில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு முடிந்ததும் அவர் தேசிய அரசியலுக்கு வருவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் திமுகவில் சேர்ந்தார். திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். அப்போது வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த குஷ்பு, ‘கட்சி தலைவரை பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவு செய்யும்’ என்று கருத்து சொல்லியிருந்தார். இது ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. திருச்சியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள சென்ற அவரை, திமுக தொண்டர்கள் விரட்டி அடித்தனர்.
அதன் பின்னர் சில காலம் அரசியலில் ஒதுங்கியிருந்தவர், திடீரென டெல்லியில் சோனியாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கிறார். ஆனால் சமீபகாலமாக கட்சி நிகழ்ச்சிகளில் அவரை காண முடியவில்லை.
இது குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
‘தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இருந்த போது, குஷ்புவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2016ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்களிடம் பணம் கேட்டதாக அவர் மீது புகார் செய்யப்பட்டது. இது குறித்து ராகுல் காந்தியே அவரை அழைத்து கண்டித்தார். இந்நிலையில் இளங்கோவன் மாற்றப்பட்டு, திருநாவுக்கரசன் தலைவர் பதவிக்கு வந்த பின்னர், குஷ்புவுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொது செயலாளர் நக்மா சென்னை வந்திருந்தார். அவர் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசினார். இது குறித்து குஷ்புவுக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை.
டெல்லியில் இருந்து சில அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுதான் நக்மா சென்னை வந்து தலைவர்களை சந்தித்தார் என்ற தகவல் குஷ்புவை ரொம்பவே அப்செட்டாக்கியது. அப்போதே மூத்த தலைவர்களிடம் அதைச் சொல்லி அவர் வருத்தப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் 2 நாள் பயணமாக சென்னை வந்தார். கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டதோடு, சத்தியமூர்த்தி பவனில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போதும், நிர்வாகிகள் சந்திப்பின் போதும், கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திலும் குஷ்புவை காணமுடியவில்லை. ராகுலை சந்திக்க குஷ்புவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கட்சியில் தனக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதை உணர்ந்தே அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டார்’ என்று விபரம் அறிந்தவர்கள் சொன்னார்கள்.
இது குறித்து குஷ்புவிடம் கேட்க முயன்றோம். அவர் போனை எடுக்கவில்லை. அவருக்கு நெருக்கமான ஒருவர் நம்மிடம், ‘குஷ்பு வெளிநாட்டில் இருந்த போதுதான் ராகுல் சென்னை வருகை உறுதியானது. வெளிநாட்டில் இருந்து அவசர அவசரமாக அவர் சென்னை வந்தார். ஹோட்டலில் தங்கியிருந்த ராகுலை சந்தித்துப் பேசினார். கட்சியினரை ராகுல் சந்தித்த போதும் குஷ்பு வந்திருந்தார். ஆனால் நிர்வாகிகள் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. அதற்கு காரணம், அவர் வெளிநாட்டில் இருந்ததுதான். மற்றபடி அவரை யாரும் புறக்கணிக்கவில்லை’ என்றார்.
சங்கமித்ரா பட வேலைகளில் தீவிரமாக இருக்கும் குஷ்பு, பாஜக தலைவர் தமிழிசையோடு ட்விட்டரில் சில நாட்களுக்கு முன்பு கடுமையாக சண்டையிட்டார். அதே நேரத்தில் கட்சி பணியில் இருந்து ஒதுங்கியிருப்பது கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.