கால்நடைக்கான வர்த்தகத்தில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுள்ளது. அதன்படி, வர்த்தக நோக்கில் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்து மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
மேலும், சந்தையில் மிருகங்களுக்கு இடையே போதுமான இடைவேளை இருக்க வேண்டும். தேவையான உணவுகள் வழங்க வேண்டும். வழுக்கும் தரைகளில் கட்டி வைக்கக் கூடாது. போதிய மருத்துவர்கள் கண்காணிப்பு இருக்க வேண்டும். உடல்நலம் சரியில்லாத மிருகங்களை மற்ற மிருகங்களுடன் சேர்த்து வைக்காமல், தனியாக வைக்க வேண்டும் போன்ற பல விதிமுறைகள் இந்த உத்தரவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், விவசாயிகள் மட்டுமே, மாடுகளை சந்தைகளில் விற்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இதுகுறித்து திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், "நாட்டில் பாஜக ஆட்சி நடக்காமல், ஆர்.எஸ்.எஸ் ஆட்சி தான் நடக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சான்று இருக்க முடியாது. இந்த உத்தரவை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. ஒருவர் இறைச்சிக்காக மாட்டை விற்கிறாரா அல்லது வேறு காரணத்திற்காக மாட்டை விற்கிறாரா? என்பதற்கு எந்த வரையறையும் இந்த உத்தரவில் இல்லை. உழைக்கும் வர்க்கத்தினரை நசுக்கும் நோக்கில் இந்த உத்தரவு உள்ளது. குறிப்பாக, சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையில் இந்த உத்தரவு உள்ளது" என்றார்.