போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் திட்டமிட்டபடி 15ம் தேதி நடைபெறும் என்று அமைச்சருடனான பேச்சுவார்த்தை முடிந்ததும் தொழில் சங்கங்கள் அறிவித்துள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழில் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. அவர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இன்று காலை பல்லவன் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும் போது, ‘தொழிலாளர்களுக்கு 13 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக ரூ.750 கோடி ஒதுக்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதை தொழில் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். தொழிற்சங்கங்கள் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன். மேலும் 2000 பேருந்துகள் வாங்க அரசாணை வெளியிட்டுள்ளது. இன்னும் 2000 பேருந்துகள் வாங்க முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’ என்றார்.
இதனிடையே தொழிற்சங்கங்கள் சார்பில் நிருபர்களிடம் பேசிய தலைவர்கள், ‘அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும்’ என்று அறிவித்தனர்.