Advertisment

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வாய்ப்பில்லை : கைவிரித்த கவர்னர் வித்யாசாகர் ராவ்

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி எடப்பாடி அரசுக்கு உத்தரவிடும் வாய்ப்பில்லை. ‘பால் இஸ் நாட் இன் மை கோர்ட்’ என கவர்னர் தெரிவித்தார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
aiadmk, aiadmk merger, tn assembly floor test, governor vidyasagar rao

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி எடப்பாடி அரசுக்கு கவர்னர் உத்தரவிடும் வாய்ப்பில்லை என தெரிய வந்திருக்கிறது. ‘பால் இஸ் நாட் இன் மை கோர்ட்’ என தன்னை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கவர்னர் தெரிவித்தார்.

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி, ஆளுனர் வித்யாசாகர் ராவ் உத்தரவிடுவாரா? என்பதுதான் கடந்த ஒரு வார காலமாக தமிழக அரசியல் வட்டாரத்தின் ஆகப்பெரிய எதிர்பார்ப்பு. காரணம், 135 அதிமுக எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டமன்றத்தில், டிடிவி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மெஜாரிட்டிக்கு தேவையான 117-ஐ விட குறைந்தது.

எனவே எடப்பாடி அரசை சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இன்று (ஆகஸ்ட் 30) இடதுசாரிகளுடன், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் இணைந்து சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனுக்கு படையெடுத்தனர்.

காலை 10.45 மணியளவில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு வந்தனர். காலை 11 மணிக்கு அவர்கள் கவர்னரை சந்தித்தனர்.

அப்போது, கடந்த பிப்ரவரியில் 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வைத்திருந்த ஓ.பி.எஸ். அணி கோரிக்கை வைத்தவுடன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினர். இப்போது 19 எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்திருப்பதால், எடப்பாடி அரசு மெஜாரிட்டி இழந்துவிட்டது வெளிப்படையாக தெரிகிறது. எனவே குதிரை பேரத்திற்கு வழிவகுக்காமல், உடனே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த 4 தலைவர்களும் நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘19 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்த உடனேயே இந்த அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது. மக்கள் பிரச்னை எதையும் கண்டுகொள்ளாத செயலற்ற அரசாக இது இருக்கிறது. இந்த அரசை தொடர விடுவது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும்.

கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க, சபாநாயகர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருப்பது ஏற்கத்தக்க நடவடிக்கை இல்லை. அதேபோல திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமைக்குழு மூலமாக நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது தவறான செயல்பாடு. ஜனநாயகத்தை காக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினோம்.’ என்றார் ஜி.ஆர்.

அடுத்து பேசிய திருமாவளவன், ‘எங்கள் கோரிக்கையை கவர்னரிடம் முன்வைத்தோம். அவர் எங்களிடம் ‘தற்போதுள்ள சூழலில் இதில் நான் தலையிட முடியாது. அதற்கு சட்டம் இடம் கொடுக்கவில்லை’ என ஆளுனர் கூறினார். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவை விட்டு விலகவில்லை. அவர்கள் இன்னும் அதிமுக.வில் நீடிப்பதாக கூறியிருக்கிறார்கள். எனவே இந்த அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக கூற முடியாது’ என கவர்னர் கூறினார். நாங்கள், ‘உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. நேரடியாக உங்களிடம் வந்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என கூறியிருக்கிறார்கள். எனவே நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டிருக்கிறோம்’ என்றார் திருமா.

முத்தரசன் கூறுகையில், ‘இதே போன்ற ஒரு சூழல் கேரளாவிலோ, மேற்கு வங்கத்திலோ, திரிபுராவிலோ நடந்திருந்தால், நடவடிக்கை எடுக்காமல் இருப்பார்களா?’ என கேள்வி எழுப்பினார். ஜவாஹிருல்லா கூறுகையில், ‘கவர்னர் எங்களிடம், ‘பால் இஸ் நாட் இன் மை கோர்ட்’ என்றார். நாங்கள், ‘பந்து உங்கள் மைதானத்தில்தான் இருக்கிறது. இதில் நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்’ என வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறோம்’ என தெரிவித்தார்.

திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பார்த்தால், இந்த விவகாரத்தில் கவர்னர் கை விரித்துவிட்டதாகவே தெரிகிறது. எனவே தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி எடப்பாடி அரசுக்கு கவர்னர் உத்தரவிடும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

Thirumavalavan Muttharasan G Ramakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment