நொய்யல் ஆற்றில் மக்கள் சோப்பு போட்டு குளிக்கும் நீர் கலந்ததாலேயே, அந்த ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளது எனவும், சாயக்கழிவுகளால் நுரை ஏற்படவில்லை எனவும், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியிருப்பது கேலிக்கு உள்ளாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு அங்குள்ள சாயப்பட்டறை தொழிற்சாலைகள், இரவு நேரங்களில் சாயக்கழிவுகளை திறந்துவிட்டு நொய்யல் ஆற்றை மாசுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சாயக்கழிவுகளின் காரணமாக, நொய்யல் ஆற்றில் தண்ணீர் நுரை பொங்க ஓடியது. இதனால், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளை திறந்து விடுவதை தடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு திறந்துவிடும் சாயப்பட்டறைகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட சாய சலவை பட்டறை சங்க நிர்வாகிகள் மற்றும் பொது நல அமைப்புகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அமைச்சர் கருப்பணன், “நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளால் அதிகளவில் நுரை வந்ததாக புகார் எழுந்தது. ஆனால், அது உண்மைக்கு புறம்பானது. கோவை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட வீடுகளில் பயன்படுத்தப்படும் சோப்பு மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளாலேயே நுரை ஏற்பட்டது. சாயக்கழிவுகளால் அல்ல.”, என தெரிவித்தார்.
அமைச்சர் கருப்பணனின் இந்த கருத்து பெரும் நகைப்பை ஏற்படுத்தியதோடு அல்லாமல், பலரும் இக்கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் கருப்பணன் செயல்படுவதாக குற்றம்சாட்டிய, பாமக-வின் இளைஞரணித் தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், அமைச்சர் கருப்பணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை ஆற்றில் நீர் ஆவியாகாமல் தடுப்பதாக கூறி, நான்கைந்து தெர்மாகோல்களை மிதக்கவிட்டது பெரும் கேலிக்குள்ளாகிய நிலையில், தற்போது சோப்பு நுரைதான் நொய்யல் ஆற்றில் நுரை ஏற்படுவதற்கு காரணம் என அமைச்சர் கருப்பணன் கூறியிருப்பதை பலரும் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.