நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு நீட் தேர்விற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது, இதனால் அந்தப் பகுதிச் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.
போராட்டத்தில் பங்குபெற்ற மாணவிகள் பேசிய போது, "மத்திய அரசு உடனடியாக இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். யாருக்கு வேண்டும் இந்த நீட் தேர்வு? எதற்காக இந்த நீட் தேர்வு? லட்சங்களை செலவு செய்து எங்களால் நீட் தேர்விற்கு படிக்க முடியாது. திடீரென ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, நீட் தேர்வில் பாஸ் செய்தால் தான் மெடிக்கல் சீட் கிடைக்கும் என்றால் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களை கலைந்துபோக சொல்லும் காவல்துறையினருக்கு நீட் தேர்வு வைத்தால் ஒத்துக்கொள்வார்களா? எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்த நுங்கம்பாக்கம் அரசுப் பள்ளியில் காலை வகுப்புகள் நடைபெற்றன. மதியம் பள்ளி முடிந்ததையடுத்து, மாணவிகள் வெளியே வந்து இந்த சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்திற்கே இந்த சம்பவம் தெரியவில்லை. அதேபோல், பள்ளி முடிந்து பிள்ளைகளை அழைக்க வந்த பெற்றோர்களுக்கும் மாணவிகள் திடீரென நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தியது அதிர்ச்சியாக இருந்தது.
ஆனால், நீட் தேர்விற்கு எதிராக தான் தங்களது பிள்ளைகள் போராடுகிறார்கள் என்பதை அறிந்த பெற்றோர்கள், ஓரமாக நின்றுக் கொண்டு வேடிக்கை மட்டும் பார்த்தனர்.
மாணவிகளை கலைந்து செல்லுமாறு போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவர்கள் கேட்கவில்லை. இதற்கிடையில், அந்தப் பள்ளியின் ஆசிரியைகள் வந்து மாணவிகளை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது ஒரு ஆசிரியை மாணவிகளை சாலையிலேயே வைத்து அடித்தார்.
இதன்பின் போலீசார் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் மாணவிகள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ள ஒப்புக் கொண்டனர். ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் அவர்கள் சாலைக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் அவர்கள் போராட்டம் நடத்துவதற்கான காரணம் புரியாமல் போலீசார் தடுமாறினர். அப்போது மாணவிகள், "போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான மூன்று மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும்" என்று கோஷம் எழுப்பினர்.
முன்னதாக, மாணவிகள் நடத்திய இந்த போராட்டத்திற்கு லயோலா கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான மாணவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், தங்கள் மீது பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறியும் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போராட்ட வேகம் குறைந்தது. ஆனால் சென்னையில் யாரும் எதிர்பாராதவிதமாக பள்ளி மாணவிகள் நடத்திய ஆவேசப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக போராட்டம் நடந்துக் கொண்டிருக்கையில் மாணவிகளிடம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பேச்சுவார்த்ததை நடத்தினார். அப்போது, மாணவிகள் போராட்டத்தை கைவிடவில்லை எனில், அடுத்தவாரம் நடைபெறவுள்ள காலாண்டுத் தேர்வை எழுத முடியாது என்றும், மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கப்படும் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. திங்கட்கிழமை தேர்வு எழுத வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் நலனில் எங்களுக்கும் அக்கறை உள்ளது. அவர்கள் எங்கள் பிள்ளைகள் தான்" என்று மாநகராட்சி கூடுதல் கல்வி அதிகாரி முனியன் பத்திரிக்கையாளர்களிடம் உறுதியளித்தார்.
இருப்பினும், தற்போது மாணவிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.