அதிமுக அணிகள் இனி ஒன்றிணைவதற்கு சாத்தியமில்லை: ஓபிஎஸ் திட்டவட்டம்

அதிமுக அணிகள் இனி ஒன்றிணைவதற்கு வாய்ப்பு இல்லை என ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக கட்சி இரண்டாக பிளவு பட்டது. சசிகலா முதல்வராகும் எண்ணத்தில் இருந்தபோது, ஓ பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டேன் என பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

மேலும், சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதன்பின்னர் ஓ பன்னீர் செல்வம் பக்கம் சில எம்எல்ஏ-க்களும், எம்.பி-க்களும் செல்லவே அதிமுக-வில் பிளவு ஏற்பட்டது.

இதனிடையே, ஜெயலலிதாவின் ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, சசிகலா தரப்பும், ஓ பன்னீர் செல்வம் தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரின. இரு தரப்பு புகார்களையும் பெற்ற தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக அறிவித்தது. இதனால், அதிமுக அம்மா அணி(சசிகலா) மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா(ஓபிஎஸ்) அணி என இரண்டு அணிகளாக இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. இதனிடையே ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் சென்றதையடுத்து, அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இரு அணிகளும் இணைவதற்கு பேச்சுவார்ததை குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும், பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதிமுக-வில் இருந்து சசிகலா, டிடிவி தினகரனை ஒதுக்கும் வரை பேச்சுவார்ததை இல்லை என ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை குழுவும் கலைக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக-வின் இரு அணிகளும் இணைவதற்கு இனி வாய்ப்பில்லை என ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து தேனி மாவட்டம் உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது: அதிமுக-வின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். அதிமுக-வின் இரு அணிகளும் இனி இணைவதற்காக வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

×Close
×Close