6 மாத இடைவெளிக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் ஓ.பி.எஸ். : கட்டித் தழுவி வரவேற்றார் இ.பி.எஸ்.

6 மாத இடைவெளிக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டித் தழுவி வரவேற்றார்.

By: August 21, 2017, 3:01:21 PM

6 மாத இடைவெளிக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டித் தழுவி வரவேற்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரது உயிர்த்தோழி சசிகலா தலைமையில் அதிமுக.வினர் ஒருங்கிணைந்தனர். கடந்த பிப்ரவரி 7-ம் தேதி அப்போதைய முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் நடத்திய திடீர் தியானம் நடத்தியதன் மூலமாக இந்த ஒருங்கிணைப்பில் விரிசல் உருவானது. சசிகலா முதல்வர் பதவியை நோக்கி காய் நகர்த்தியதே அந்த விரிசலுக்கு காரணம்.

ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும் காட்சிகள் மாறின. சசிகலாவால் முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியிலும் ஆட்சியிலும் தனது செல்வாக்கை உயர்த்த ஆரம்பித்தார். ஓ.பி.எஸ். அணியை தங்களுடன் வந்து இணையும்படி ஆரம்பம் முதல், எடப்பாடி அணியினர் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், ‘சசிகலா நீக்கம், ஜெ. மரணத்திற்கு சி.பி.ஐ. விசாரணை’ என இரட்டை கோரிக்கைகளை முன்வைத்து ஓ.பி.எஸ். அணியினர் இணைப்புக்கு தடை போட்டு வந்தனர். இதற்கிடையே டிடிவி.தினகரன் தரப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் ஆரம்பித்ததும், ஓ.பி.எஸ்.ஸுடன் இணைப்பு நடவடிக்கையை வேகப்படுத்த முடிவெடுத்தனர்.

அதன்படி, ‘ஜெ.மரணத்திற்கு நீதி விசாரணை, போயஸ் கார்டன் பங்களா அரசுடமை’ என இரட்டை அறிவிப்புகளை எடப்பாடி வெளியிட்டார். இந்த அறிவிப்புகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததால், ஓ.பி.எஸ். அணியின் ‘தர்மயுத்தத்தை’ இதற்கு மேலும் நீடிக்க முடியாத நெருக்கடி உருவானது. அவர்கள் எதிர்பார்த்த மாதிரி ஆட்சி கவிழும் சூழல் இல்லாதது ஒருபக்கம், டெல்லியில் இருந்து உருவான அழுத்தம் இன்னொரு பக்கம் ஆகியவையும் இணைப்பை நோக்கி ஓ.பி.எஸ்.ஸை நகர்த்தின.

ஆகஸ்ட் 20-ம் தேதி தனது இல்லத்தில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., “பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது. ஓரிரு நாட்களில் நல்ல முடிவை எட்டுவோம்’ என்றார். அதேபோல எடப்பாடி அணியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், வீரமணி உள்ளிட்டவர்கள் இணைப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டதாக பேட்டி கொடுத்தனர்.

இதன் க்ளைமாக்ஸ் காட்சிகளின் அணிவகுப்பு இன்று அரங்கேறியது. இன்றும் பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பிற்பகல் 2.35 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். கட்சி அலுவலகத்திலும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்று, மலர் தூவி அவரை வரவேற்றனர்.

ஓ.பி.எஸ். தனி அணி கண்டபிறகு, அவரை நேரடியாக பல முறை விமர்சனம் செய்தவர் அமைச்சர் ஜெயகுமார். எனவே தற்போது நடைபெற்ற இணைப்புப் பேச்சுவார்த்தைகளில் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. ஆனால் இன்று ஓ.பி.எஸ். தலைமை அலுவலகம் வந்ததையொட்டி, நீண்ட நேரம் அவரை வரவேற்க வாசலில் காத்து நின்றார் ஜெயகுமார்.

ஜெயகுமாருடன் மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் ஓ.பி.எஸ்.ஸுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று அழைத்துச் சென்றனர். 6 மாத கால இடைவெளிக்கு பிறகு, அதிமுக தலைமை அலுவலகம் வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். அலுவலகத்தின் உள்ளே சென்ற ஓ.பி.எஸ்.ஸை, முதல்வர் இ.பி.எஸ். கட்டித்தழுவி வரவேற்றார். இதனால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:O panneerselvam at admk head office after 6 months cm edappadi palanisamy welcomes him

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X