ஓ.பன்னீர்செல்வம் அணி 11 எம்.எல்.ஏ.க்களும் திமுக தொடர்ந்த தகுதி நீக்க வழக்கில் பதற்றமாகியிருக்கிறார்கள். இதையொட்டியே உச்சநீதிமன்றத்தை செம்மலை அணுகியிருப்பதாக தெரிகிறது.
ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி மாதம், மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து திடீர் தியானம் செய்தார். அதைத் தொடர்ந்து தனி அணியாக அவர் இயங்கினார். பிப்ரவரி 18-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் வாக்களித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அந்த 11 பேரின் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் அப்போதே சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால் கடந்த மாதம், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சட்டமன்ற உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கி, சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து, மேற்படி 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது அவர்கள் தங்கள் தரப்பு வாதமாக, ஓபிஎஸ் அணி 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காததை பிரதானமாக சுட்டிக் காட்டினர்.
இதற்கிடையே திமுக கொறடா அர.சக்கரபாணி, ஓபிஎஸ் அணியின் மேற்படி 11 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு ஆகியவற்றை விசாரிக்கும் நீதிபதி ரவிச்சந்திரபாபு அமர்வில்தான் ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கும் விசாரிக்கப்படுகிறது.
ஓபிஎஸ் அணி வழக்கில் சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில் இன்று (அக்டோபர் 13) டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோரும், ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். திமுக-வின் அர.சக்கரபாணியின் வழக்குடன் இணைத்து இவர்களின் மனுவும் விசாரிக்கப்படும் என தெரிகிறது.
இந்த வழக்கு ஓபிஎஸ் அணியினருக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. அதாவது, சட்டமன்றத்தில் கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் ஒன்று அவர்களை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை என கொறடா மூலமாக ஒரு கடிதத்தை பெற்று நடவடிக்கையில் இருந்து சபாநாயகர் விலக்கு கொடுத்திருக்க வேண்டும்.
இவை இரண்டும் நடக்காத காரணத்தால், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களும் சட்ட ரீதியாக பதவியில் தொடர முடியாத சூழல் ஏற்படும் என சட்ட நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த வழக்கில் அப்போதே சபாநாயகரிடம் புகார் கூறிய வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோரும் இணைந்து கொண்டிருப்பதால், ஓபிஎஸ் அணியினருக்கு நெருக்கடி அதிகமாகியிருக்கிறது.
இந்தச் சூழலில்தான் இன்று (13-ம் தேதி) ஓபிஎஸ் அணியின் மேற்படி 11 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான செம்மலை உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார். சபாநாயகரின் அதிகாரம் தொடர்பான வழக்காக அது இருப்பதால், உச்சநீதிமன்றமே அந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என தனது மனுவில் செம்மலை கோரியிருக்கிறார்.
பொதுவாக வழக்கு தாக்கல் செய்கிறவர்கள், தங்கள் வழக்கை பெரிய நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என முறையிடுவது இயல்பு! இதில் அதற்கு மாறாக திமுக தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியின் செம்மலை முறையிட்டிருப்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
இதற்கான காரணங்களாக இரண்டு விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார்கள். ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விரைவான விசாரணை, ஓபிஎஸ் அணியினருக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தவிர, ஒருவேளை அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பாகவே ஓபிஎஸ் அணியின் 11 பேர் பதவி பறிக்கப்பட்டால், டிசம்பரில் சட்டமன்றம் கூடும்போது அரசுக்கு நெருக்கடியாக அமையலாம்.
மற்றொன்று, டெல்லியில் அரசியல் சாசன அமர்வு அல்லது உச்சநீதிமன்ற பெஞ்சுக்கு சென்றால் இந்த வழக்கின் வேகம் நிதானமாகும். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை ஆஜராக வைப்பதும் சுலபம். இதுதான் உச்சநீதிமன்றத்தை நாடியதற்கான பின்னணி என்கிறார்கள். செம்மலை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, அவரது கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது தெரிய வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.