சுதந்திரதின விழாவையொட்டி அனுமதி மறுக்கப்பட்டதால், ஓ.பன்னீர்செல்வம் நடத்தவிருந்த போராட்டம் ஆக. 18-க்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
குடிநீர் பிரச்னை, நீட் விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து சென்னையில் ஆகஸ்ட் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி முடிவு செய்திருந்தது. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ். நடத்துகிற முதல் போராட்டம் இது.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி, கடந்த 10 நாட்களுக்கு முன்பே போலீஸாரிடம் ஓ.பி.எஸ். அணி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. ‘போலீஸ் அனுமதி வழங்கும் எந்த இடத்திலும் போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம்’ என ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 7-ம் தேதி (நேற்று) ஓ.பி.எஸ். அணி முன்னணி நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து தங்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க நினைவூட்டல் கடிதம் வழங்கினர். அப்போது, சுதந்திர தினவிழாவையொட்டி பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டியிருப்பதால் இப்போது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தர முடியாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து நிர்வாகிகள், ஓ.பி.எஸ்.ஸுடன் ஆலோசனை நடத்தினர். அதில், போலீஸாரின் வேண்டுகோளை ஏற்க முடிவு செய்யப்பட்டது. சுதந்திர தின கொண்டாட்டம் முடிந்த பிறகு ஆகஸ்ட் 18-ம் தேதி தங்களின் போராட்டத்தை வைத்துக்கொள்வதாக போலீஸாரிடம் ஓ.பி.எஸ். அணி கூறியிருக்கிறது. அதற்கு அனுமதி வழங்குவது பற்றி பரிசீலிப்பதாக போலீஸார் கூறியிருக்கிறார்கள்.