ஓ.பன்னீர்செல்வம் உச்சகட்ட நெருக்கடியில் சிக்கியிருக்கிறார். ராணுவ ஆம்புலன்ஸ் சர்ச்சை, சொத்து குவிப்பு புகார் ஆகியன அவரை வளைக்கின்றன. இனி என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?
தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்தபடியே நினைத்த நேரத்தில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திரும்பியவர்! ஆனால் ஜூலை 24-ம் தேதி துணை முதல்வராக டெல்லிக்கு சென்றவர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க முடியாமல் திரும்பியிருக்கிறார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு டெல்லியில் எகிறி நின்ற ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு, இப்போது சரிந்து விட்டதா? ஒரு பக்கம் டெல்லியின் கைவிடல், இன்னொருபுறம் சென்னையில் சொத்துக் குவிப்பு வழக்கு என உச்சகட்ட நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் ஓ.பன்னீர்செல்வம்?
முதலில் ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லியில் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் திருப்பி அனுப்பியதற்கான காரணங்களாக பல்வேறு தரப்பினரும் பட்டியலிடும் அம்சங்களை இங்கே காணலாம்!
ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.பாலமுருகன்
ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை முதல் வாரம் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவுக்கு கொண்டு வரப்பட்டார். ஜூலை 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக அப்பல்லோவுக்கு சென்று (படம், பார்க்க) நலம் விசாரிக்கவும் செய்தார்.
அப்போதும், அதன்பிறகும் பாலமுருகன் சென்னைக்கு எப்படி அழைத்து வரப்பட்டார் என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்தச் சூழலில்தான் ஜூலை 23-ம் தேதி மாலையில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு கிளம்பினார். அவர் தனியாக கிளம்பியிருந்தால், இந்தப் பயணமும்கூட பரபரப்பை கிளப்பியிருக்காது.
ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்பு அவரது அணியில் இடம் பெற்றிருந்த முக்கியஸ்தர்களான கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றனர். டெல்லியில் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை இவர்கள் சந்திக்க இருப்பதும், அந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை ஓ.பி.எஸ்.ஸின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான மைத்ரேயன் செய்திருந்ததும் தகவல்களாக வந்தன.
நிர்மலா சீதாராமன், தமிழகத்தை சேர்ந்தவர்! ஓ.பன்னீர்செல்வமோ, ‘மோடி கூறியதால்தான் அணிகள் இணைப்புக்கு சம்மதித்தேன்’ என ஏற்கனவே கூறியவர்! எனவே தங்களின் உள்கட்சி மனத் தாங்கல்களை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவே நிர்மலா சீதாராமனை ஓ.பி.எஸ். தரப்பு சந்திக்க செல்கிறதா? என்கிற கேள்வி இயல்பாக எழுந்தது.
ஆனாலும் ஜூலை 24-ம் தேதி மதியம் வரை ஓ.பிஎஸ்.ஸின் பயண நோக்கம் அதிகாரபூர்வமாக சொல்லப்படவில்லை. எனவே ஹேஸ்யங்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த ஹேஸ்ய நாடகத்தில் முக்கிய திருப்பத்தை உருவாக்கியவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
சென்னை வண்டலூர் மிருககாட்சி சாலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர், ‘தனது சகோதரருக்கு ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி சொல்லவே நிர்மலா சீதாராமனை ஓ.பி.எஸ் சந்திக்கிறார்’ என அதுவரை நிலவி வந்த மர்மத்தை உடைத்தார். தொடர்ந்து அன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் சொன்னதை ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்தார்.
ஆக, ஓபிஎஸ் பயணம் தொடர்பாக ஊதி பெருகி நின்ற அரசியல் ஹேஸ்யங்கள் அப்போதே சரிய ஆரம்பித்தன. அதன்பிறகுதான் அடுத்த அதிர்ச்சி! ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள நிர்மலா சீதாராமன் இல்லத்திற்கு சென்று திரும்பிய நிலையில், நிர்மலா சீதாராமனின் அலுவலக ட்விட்டரில் ஒரு பதிவு வெளியானது.
மைத்ரேயனை சந்திக்கவே அப்பாய்ன்மெண்ட் வழங்கியதாகவும், ஓ.பி.எஸ்.ஸை சந்திக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார் நிர்மலா சீதாராமன். இதன் மூலமாக நிர்மலா சீதாராமனின் இல்லம் வரை சென்றுவிட்டு ஓபிஎஸ் அவரை சந்திக்காமல் திரும்பியது ஊர்ஜிதம் ஆனது. சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம், ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா கூறியிருக்கிறார்’ என தனக்கு நேர்ந்த அவமானத்தை ஒப்புக்கொள்ளும் விதமாகவே பேட்டி கொடுத்தார்.
இப்போது புதிய கேள்விகள், ராணுவத்திற்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸை, எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஓ.பாலமுருகனுக்கு வழங்கியது சரியா? இதை இபிஎஸ்-ஓபிஎஸ் வெளிப்படுத்தியதால்தான் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தாரா? இந்தக் கேள்விகளின் பின்னணியில்தான் நிர்மலா சீதாராமனும், ஓ.பன்னீர்செல்வமும் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஏற்கனவே, ‘மோடி கூறியதால்தான் அணிகள் இணைப்புக்கு சம்மதித்தேன்’ என முன்பு ஓபிஎஸ் பேசியதும் பாஜக தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இப்போது ஏர் ஆம்புலன்ஸ் உதவியை போட்டு உடைத்தது, ஆதரவு தலைவர்களை திரட்டிக்கொண்டு நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றது ஆகியவற்றையும் பாஜக மேலிடம் விரும்பவில்லை என்றே தெரிகிறது.
எனவே இனி டெல்லி பாஜக மேலிடத் தலைவர்களிடம் ஓ.பி.எஸ் பழைய செல்வாக்கை பெற முடியுமா? என்கிற கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்கிறது. இன்னொருபுறம் திமுக, அறப்போர் இயக்கம் ஆகியன தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸ் விசாரணை தொடங்கியிருக்கிறது.
இப்போதைக்கு இந்த வழக்கை எதிர்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தயவு தேவைப்படும்! டெல்லியில் செல்வாக்கு சரிந்த நிலையில், அதிகாரத்தை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமியை பகைக்க முடியாது. மாநிலம் முழுவதும் பதவிகளுக்காக காத்திருக்கும் தனது ஆதரவாளர்களுக்கு கறாராக பேசி பதவிகளை பெற முடியாது. இவை எல்லாமே ஓ.பி.எஸ்.ஸுக்கு பெரும் நெருக்கடிகள்!
ஓபிஎஸ் ஏமாற்றத்துடன் திரும்பியதற்கு அடுத்த நாளே இபிஎஸ் தரப்பை சேர்ந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் வேணுகோபால் ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து தமிழக தேவைகள் குறித்து வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறார்கள்.
ஓபிஎஸ் திருப்பி அனுப்பப்பட்ட அதே நாளில் அதிமுக எம்.பி. சத்தியபாமா, நிர்மலா சீதாராமனை சந்தித்து திரும்பியதும் குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த ஓ.பன்னீர்செல்வம் எதிர்கொள்ளும் பெரும் சோதனை இது! இதன் தொடர்ச்சியாக உள்கட்சிப் பஞ்சாயத்துகளை சமாளிப்பதுதான் இன்னும் பெரிய சோதனையாக அவருக்கு அமையும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.