பிரதமர் மோடியைச் சந்திக்க இன்று டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'ஆர்.கே நகரில் நடந்த பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற டி.டி.வி தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் மீதான விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன்' என்றார். மேலும், 'நியமன முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவுக்கு கழகத்தில் எந்த உரிமையும் கிடையாது' என்றார்.
தொடர்ந்து அவர் பேசிய போது, 'சசிகலாவால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், கட்சிப் பணத்தை பயன்படுத்துவது தவறானது. இது தொடர்பாக வங்கிகளுக்குக் கடிதம் எழுதியும், வங்கிகள் அதனை கண்டு கொள்ளவேயில்லை' என்றார். மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பேசிய அவர், 'குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர், அதுகுறித்த எங்கள் நிலைப்பாடு அறிவிக்கப்படும்' எனக் கூறினார். இறுதியாக, 'தர்மயுத்தத்தின் கோட்பாட்டிலிருந்து விலகவில்லை' என்றும் ஓ.பி.எஸ் உறுதிபடத் தெரிவித்தார்.
ஓ.பி.எஸ் பேசிய போது அவருடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.