O panneerselvam offers resignation: ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என அதிமுக செயற்குழுவில் பேசியிருப்பது கட்சிக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன பின்னணி?
ஓ.பன்னீர்செல்வம், அதிமுக.வில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்! ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வர் பதவியை ஏற்றவர்! சசிகலா இவரை ராஜினாமா செய்யச் சொன்னதும் தர்மயுத்தம் தொடங்கினார். அதிமுக சசிகலா ஓரங்கட்டப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்து கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறார்கள்.
இந்தச் சூழலில் ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக பேசினார். ‘ஜெயலலிதா அதிமுக.வை 37 தொகுதிகளில் ஜெயிக்க வைத்தார். அதேபோல வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி! கட்சி வளர்ச்சிக்காக எனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்’ என குறிப்பிட்டார் ஓபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த திடீர் உருக்கப் பேச்சு அதிமுக.வில் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் அதிமுக.வை இணைத்து விட்டதில் முக்கியப் பங்கு ஓ.பிஎஸ்.ஸுக்கு உண்டு. இதை ஒப்புக்கொள்ளும் விதமாக அவரே, ‘மோடி சொல்லித்தான் அணிகள் இணைப்புக்கு ஒப்புக்கொண்டேன். துணை முதல்வர் பதவியையும் ஏற்றேன்’ என ஒருமுறை கூறினார்.
ஆனால் அதே ஓ.பி.எஸ். டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றபோது, திருப்பி அனுப்பப்பட்டார். தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரண நிதி, வறட்சி நிதி எதையும் வழங்காத மத்திய அரசு, நீட் உள்ளிட்ட பிரச்னைகளிலும் காலை வாரியது.
அதனால் பாஜக மீது அதிமுக தொண்டர்களே கடுப்பானார்கள். பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் அதிமுக.வை கொண்டு சேர்த்த ஓ.பன்னீர்செல்வம் மீதும் இயல்பாக அவர்களுக்கு வெறுப்பு உருவானது. இதையெல்லாம் சரிகட்டி, கட்சியினரின் அனுதாபத்தை பெறவே செயற்குழுவில் ஓபிஎஸ் உருக்கமாக பேசியதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
அதிமுக தலைமைக்கழக நிர்வாகி ஒருவர், இன்னொரு கோணத்தில் அலசினார். ‘ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததில் பிரச்னை இல்லை. அவரை நம்பி வந்தவர்களுக்கு வாதிட்டு இதுவரை பதவி பெற்றுக் கொடுக்க முடியாததுதான் சிக்கல்!
அதிமுக.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், இரு துணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுடன் இணைந்து பணியாற்ற ஒருங்கிணைப்புக் குழு ஒன்று உருவாக்குவது என இணைப்பின்போது முடிவெடுக்கப்பட்டது. அந்தக் குழுவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் இடம்பெறுவதை தடுப்பதற்காக அந்தக் குழுவையே அமைக்க விடாமல் சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள். மதுசூதனன், மைத்ரேயன் ஆகியோர் இதற்காக குரல் எழுப்பியும் பலன் இல்லை.
ஓ.பன்னீர்செல்வம் தனக்கு கட்சியிலும் ஆட்சியிலும் பதவி பெற்றார். தனது சம்பந்தி ஒருவருக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முக்கிய பொறுப்பை பெற்றுக்கொண்டார். தனது மகனுக்கு தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பை பெற்றார். இதில் விசேஷம், இவரது மகனும், சம்பந்தியும் ஜெயலலிதாவால் பதவி பறிக்கப்பட்டவர்கள்!
குடும்ப ஆதிக்கத்தை எதிர்ப்பதாக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் தனது குடும்பத்திற்கு பதவி பெற தயங்கவே இல்லை. அதேசமயம் அவரை நம்பி வந்த நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. மாவட்ட அளவிலும் அவரது ஆதரவாளர்கள் பதவி பெற முடியாமல் அல்லாடுகிறார்கள்.
இதனால் ஆரம்பத்தில் ஓ.பிஎஸ். ஆதரவாளர்களாக இருந்த பலரும் அவரது தீவிர எதிர்ப்பாளர்களாக மாறி வருகிறார்கள். அவர்களை கூல் செய்யவே தன்னை பதவி ஆசை இல்லாதவராகவும், ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு வருகிறார் ஓபிஎஸ்!’ என்றார் அந்த நிர்வாகி.
ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர், முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமி. ‘காவிரி நடுவர் மன்றம் அமைக்காவிட்டால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து அதிமுக பரிசீலிக்கும்’ என டிவி விவாதத்தில் கூறியதற்காக இவரை கட்சியை விட்டு இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து நீக்கினர்.
ஆனால் ஓபிஎஸ்.ஸை சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பிய அதே நிர்மலா சீதாராமன், அதிமுக,வை விட்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமியை டெல்லியில் தனது அலுவலகத்தில் சந்தித்தார். ‘அதிமுக.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனமே செல்லாது. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும்’ என கே.சி.பி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டார். அது குறித்து பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒருவேளை அந்த வழக்கில் கே.சி.பி. வெற்றி பெற்றால், பொதுச்செயலாளர் தேர்தல் வரும்! அந்தச் சூழலில் அதிகாரம் மிக்க பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற துணை முதல்வர் பதவியை கைவிட ஓபிஎஸ் தயாராவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!
OPS indirectly demands General Secretary post. For that only he says, will skip Dy CM to strengthen the party. #AIADMK
— K C Palanisamy (@KCPalanisamy1) 24 August 2018
கே.சி.பழனிசாமி இன்று வெளியிட்ட ட்வீட்டில், ‘ஓ.பன்னீர்செல்வம் பொதுச்செயலாளர் பதவியை கேட்கிறார். அதற்காகவே கட்சியை வலுப்படுத்த துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என பேசியிருக்கிறார்’ என இதில் உள்ள ரகசியத்தை உடைத்திருக்கிறார்.
அரசியலைப் பொறுத்தவரை பதவி கேட்டாலும் அதில் ஒரு லாபம் இருக்கும்; பதவி வேண்டாம் என்றாலும் ஒரு லாபக் கணக்கு இருக்கும்! அதுதான் அரசியல்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.