டி.டி.வி.தினகரன் நியமனம் செல்லாது என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து எடப்பாடி தரப்பை ‘லாக்’ செய்திருக்கிறார் ‘ராஜதந்திர’ ஓ.பி.எஸ்.!
இதன் பின்னணி தகவல்கள் சுவாரசியமானவை!
அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன், ஜெ. நினைவிடத்தில் அரங்கேற்றிய தியானம் மூலமாக படு ‘பேமஸ்’ ஆனார் ஓ.பன்னீர்செல்வம். அதைத் தொடர்ந்து அத்தனை மாவட்டச் செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களும் தனது பின்னால் ஓடி வருவார்கள் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் நடக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு ஆட்சியை அமைத்துவிட்டே சசிகலா சிறைக்கு சென்றார். அதன்பிறகு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என பலரையும் தக்க வைப்பது எடப்பாடிக்கு பெரிய சிரமமாக இல்லை. இதனால் ஓ.பி.எஸ். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும், 11 எம்.எல்.ஏ.க்களைத் தாண்டி அவர் பக்கம் போகவில்லை. அதுவும் முதல் ஆளாகச் சென்ற ஆறுகுட்டி எம்.எல்.ஏ., முதல் ஆளாக அங்கிருந்து ‘ரிட்டர்ன்’ ஆகவும் செய்துவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி
எனவே கட்சியை கைப்பற்றவேண்டும் என்றால், எடப்பாடி அணிக்குள்ளேயே அடுத்த குழப்பம் வந்தால்தான் உண்டு என்பதைத்தான் ஓ.பி.எஸ். தரப்பு எதிர்பார்த்து காத்திருந்தது. அதேபோல வந்து அமைந்ததுதான் எடப்பாடி -டிடிவி.தினகரன் இடையிலான லடாய்! கடந்த 10-ம் தேதி அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் கட்சி நிர்வாகிகளைக் கூட்டிய எடப்பாடி பழனிசாமி, ‘டிடிவி.தினகரனை துணைப் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்ததே செல்லாது. எனவே அவரால் கட்சிப் பதவியில் இருந்து யாரையும் நீக்கவோ சேர்க்கவோ முடியாது’ என தீர்மானம் போட்டார். தவிர, ‘முறையாக பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் வரை இடைக்கால ஏற்பாடாகவே சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதாகவும், தேர்தல் ஆணைய விசாரணையில் அது இருப்பதாகவும்’ அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சசிகலாவுக்கும், டிடிவி.க்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் தீர்மானம் போட ஐடியா கொடுத்தது, ஓ.பி.எஸ். தரப்புதானாம். காரணம், சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்தது செல்லாது என ஓ.பி.எஸ். தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருக்கிறது. தவிர, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி இரண்டு லட்சம் அபிடவிட்களையும் அவர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
அதேசமயம், எடப்பாடி தரப்போ சசிகலா, டிடிவி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவரையும் நிர்வாகிகளாக குறிப்பிட்டு சுமார் 5 லட்சம் அபிடவிட்களை தேர்தல் ஆணையத்தில் வழங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் இப்போது அதே எடப்பாடி அணியினர் தேர்தல் ஆணையத்தில் தாங்கள் கொடுத்த அபிடவிட்களுக்கு விரோதமாக, ‘டிடிவி.யின் நியமனம் செல்லாது’ என தீர்மானம் நிறைவேற்றியிருப்பதுதான் விசேஷம்!
டிடிவி.தினகரன்
இப்படி தீர்மானம் நிறைவேற்றியதும் ஓ.பி.எஸ். அணி பேச்சுவார்த்தைக்காக தங்கள் கதவை வந்து தட்டும் என எடப்பாடி தரப்பு எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் கடந்த 11-ம் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவுக்கு டெல்லி சென்ற ஓ.பி.எஸ். தன்னுடன் ஒரு படையையே திரட்டிச் சென்றார். அப்போதும்கூட எடப்பாடி அணியின் முன்னணி தளகர்த்தர்களுக்கு, ‘எதற்காக அத்தனை பேர் டெல்லி செல்கிறார்கள்?’ என்பது புரியவில்லை.
டெல்லியில் வெங்கையா நாயுடுவை வாழ்த்தும் வேலையை ஓ.பி.எஸ். கவனித்துக்கொள்ள, அவருடன் சென்றிருந்த கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு சென்றனர். முந்தைய தினம் எடப்பாடி அணியினர் நிறைவேற்றிய தீர்மான நகலை தேர்தல் ஆணையத்தில் தனி அபிடவிட்டாக தாக்கல் செய்த அவர்கள், ‘டிடிவி.நியமனம் செல்லாது என அவர்களே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். எனவே அவர்கள் தாக்கல் செய்த 5 லட்சம் அபிடவிட்களும் நம்பகத்தன்மை அற்றவை. எனவே எங்கள் கோரிக்கையை ஏற்று, ‘சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியது செல்லாது’ என அறிவிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தையும் எங்களுக்கே தரவேண்டும்’ என கோரிக்கை வைத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
இரட்டை இலைக்கு உரிமை கோரும் வழக்கில் இது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி தரப்பு தீர்மானம் நிறைவேற்றி 3 நாட்கள் ஆகிற சூழலிலும், ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து இன்னமும் இணைப்புக்கான பாசிட்டிவ் சிக்னல் வரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக, ஓ.பி.எஸ்.ஸின் ராஜதந்திரத்திற்கு முன்னால், ஆட்சியில் இருக்கும் எடப்பாடி அணி வீழ்ச்சியை சந்திக்கிறது. ஒருவேளை எடப்பாடி - டிடிவி மோதலில் ஆட்சி கவிழ்ந்தால், ஓ.பி.எஸ். தரப்பு தங்களையே முழுமையான அதிமுக.வாக பிரகடனம் செய்யவும் தோதாக இருக்கும். அதை நோக்கியே காட்சிகள் நகர்வதாக தெரிகிறது.