Advertisment

ஓ.பன்னீர்செல்வத்திற்கு இபிஎஸ் மீது மன வருத்தமே இல்லையாம்! டெல்லியில் பேட்டி

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டுகிறாரா? எனக் கேட்டதற்கு, டெல்லியில் மறுப்பு தெரிவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
deputy cm o.panneerselvam, cm edappadi palaniswami, tamilnadu government, aiadmk, pm narendra modi

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டுகிறாரா? எனக் கேட்டதற்கு, டெல்லியில் மறுப்பு தெரிவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

Advertisment

ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக இருந்தபோது இருந்த சந்தோஷத்துடன் இப்போது இல்லை என்பதே அவரது ஆதரவாளர்கள் கூறும் தகவல்! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பனிப்போர் தொடர்வதாகவே அரசியல் வட்டாரத்தில் தகவல் உலவுகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லிக்கு பயணமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓ.பன்னீர்செல்வம் இந்தப் பயணத்தை தனியாக மேற்கொண்டிருந்தாலோ, அல்லது சீனியர் அமைச்சர்கள் ஓரிருவருடன் போயிருந்தாலோ அது சர்ச்சை ஆகியிருக்காது. முன்பு தனி அணியாக இயங்கியபோது தனது தளகர்த்தர்களாக இருந்த கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் ஆகியோருடன் டெல்லிக்கு கிளம்பினார் ஓபிஎஸ்.

ஏற்கனவே கடந்த 6-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லியில் முகாமிட்டிருந்தார் ஓபிஎஸ். அப்போது பிரதமரின் அப்பாய்ன்மென்ட் கிடைக்கவில்லை. எனவே ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக டெல்லிக்கு பயணமானார் அவர். கடைசி நேரத்தின் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணியும் இவர்களுடன் இணைந்தார். டெல்லி விவகாரங்களை இபிஎஸ் சார்பில் ‘டீல்’ செய்கிறவர் தங்கமணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (அக்டோபர் 12) காலை 11 மணிக்கு பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்-ஸுக்கு அப்பாய்ன்மென்ட் வழங்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று இரவே ஓபிஎஸ், தங்கமணி, முனுசாமி, மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தனர்.

தமிழக அனல் மின்நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி தேவை என்கிற கோரிக்கையுடன் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை கையுடன் எடுத்துச் சென்றார் ஓபிஎஸ்! மின் துறை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஓபிஎஸ்.ஸுடன் அமைச்சர் தங்கமணியும் செல்ல விரும்பினார். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதற்கு ஒப்புதல் வரவில்லை என்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்தின் பேரிலேயே அவருக்கும், மைத்ரேயனுக்கும் மட்டும் ‘அப்பாய்ன்மென்ட்’ வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதிமுக-வின் டெல்லி முகமான மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையோ, அதிமுக மக்களவை குழுத் தலைவர் வேணுகோபாலோ அழைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினரான முனுசாமி, மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் ஆகியோருடன் பிரதமர் இல்லம் சென்றார். ஆனால் ஓபிஎஸ், மைத்ரேயன் ஆகிய இருவர் மட்டும் பிரதமரை சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போது முதல்வர் தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி கேட்டு எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை பிரதமர் மோடியிடம் ஓபிஎஸ் வழங்கினார்.

பின்னர் வெளியே வந்த ஓபிஎஸ்-ஸிடம் இந்த சந்திப்பு குறித்து நிருபர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். ‘தமிழக ஆட்சியில் உங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. உங்களை எடப்பாடி பழனிசாமி கலந்து ஆலோசிப்பதில்லை என்பது குறித்து புகார் கூறவே பிரதமரை சந்தித்ததாக கூறுகிறார்களே?’ என கேட்டதற்கு, ‘நான் உள்பட அனைத்து அமைச்சர்களுடனும் கலந்து ஆலோசித்தே அண்ணன் எடப்பாடி பழனிசாமி முடிவுகளை எடுக்கிறார். எனவே இது தவறான தகவல்!’ என்றார்.

‘எடப்பாடி பழனிசாமி உங்களை ஒதுக்கி வைத்திருப்பதால் நீங்கள் மன வருத்தத்தில் இருப்பதாக கூறுகிறார்களே?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ‘எம்.ஜி.ஆரும், அம்மாவும் இந்த இயக்கத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்கி வளர்த்தார்களோ, அந்த அடிப்படையில் இந்த இயக்கம் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகவே அண்ணன் எடப்பாடி பழனிசாமியும், நானும் போராடினோம். அதில் வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே அண்ணன் எடப்பாடி பழனிசாமியால் எனக்கு எந்த மன வருத்தமும் ஏற்படாது’ என்றார் ஓபிஎஸ்.

‘அணிகள் இணைப்புக்கு நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?’ என கேட்டதற்கு, ‘எந்தவித நிபந்தனைகளும் இன்றி இரு அணிகளும் இணைந்துள்ளன. அதிமுகவில் இனி பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.’ என்றார் அவர். டிடிவி தினகரனை கட்சியில் இணைப்பீர்களா? என கேட்டபோது, ‘இனி யாராக இருந்தாலும், கீழ்மட்ட அளவில் இருந்து உழைத்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.’ என்றார் ஓபிஎஸ்.

‘பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. தமிழக வளர்ச்சி குறித்த கோரிக்கை மனு பிரதமரிடம் அளிக்கப்பட்டுள்ளது. மின்சார தேவைக்கான நிலக்கரி பற்றாக்குறை குறித்து முதல்வர் பழனிசாமி வழங்கிய கடிதத்தை பிரதமரிடம் வழங்கினேன். உடனடியாக தமிழகத்துக்கு தேவைப்படும் நிலக்கரியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான தடுப்பு பணிகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தோம். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஓரளவு வெற்றிபெற்றுள்ளது. மத்திய அரசின் மருத்துவக் குழு தமிழகத்திற்கும் வரும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். மேலும், துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.’ என்றார் ஓபிஎஸ்.

மின் துறை தொடர்பான மனுவை கொடுக்க அந்தத் துறை அமைச்சர் டெல்லியில் இருந்தபோதும் அவரை அழைத்துச் செல்லாமல் மைத்ரேயனை அழைத்துச் சென்றது ஏன்? என்கிற கேள்விக்கு, ‘மின் துறை அமைச்சர் தங்கமணியும் நானும் பிறபகலில் இதே கோரிக்கைக்காக மின் துறை மத்திய அமைச்சரை இணைந்து சந்திக்க இருக்கிறோம்’ என மழுப்பலாக கூறி நழுவினார் ஓபிஎஸ்.

‘ஷாக்’கடிக்கும் துறையை பற்றிய பேச்சாக மட்டுமல்லாமல், இபிஎஸ் தரப்புக்கு ‘ஷாக்’கான சந்திப்பாகவும் இது அமைந்திருந்ததாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திக்கு...

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment