ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி தூதர்கள் சந்திப்பு : நிறைவேறாத நிபந்தனைகள் பற்றி பேச்சு

அதிமுக அணிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தூதர்கள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக அணிகள் இணைப்பு பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தூதர்கள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்பிறகு அதிமுக அணிகள் இணைப்பு பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி, மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோர் இதில் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததால், ஓ.பி.எஸ். தரப்பு முடிவு என்னவாக இருக்கும்? என்பது உறுதியாக தெரியாத நிலையே நீடிக்கிறது.

ஓ.பி.எஸ். அணியின் மாறுபட்ட கருத்துகள் குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நிருபர்கள் கருத்து கேட்டபோது, ‘இரு அணிகளும் இணைய வேண்டும் என விரும்புகிற நல்ல உள்ளங்கள் அதற்கேற்ப கருத்துகளை கூறி வருகிறார்கள். மாஃபாய் பாண்டியராஜனின் கருத்தையும் அப்படித்தான் பார்க்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி

கே.பி.முனுசாமியும் இதில் குறை சொன்னதாக நான் நினைக்கவில்லை. ‘சி.பி.ஐ. விசாரித்தால் நன்றாக இருக்கும், இதுவும் சரி, பார்க்கலாம்’ என்கிற விதமாகவே கருத்து கூறியிருக்கிறார். இரு அணிகளும் இணையும் என நாங்கள் நம்புகிறோம்’ என்றார் அவர். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஆகஸ்ட் 18) மாலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார். அதில் எடுக்கப்படும் முடிவை இன்று இரவே அவர் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார், சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் அந்த மருத்துவமனைக்கு சென்றார். இந்த தகவல் கிடைத்ததும் இன்று மதியம் மின் துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் அந்த மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் அவரது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். அதோடு மூவரும் தனியாக அணிகள் இணைப்பு குறித்து ஆலோசித்ததாகவும் தெரிகிறது. அப்போது ஜெ. மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடாதது குறித்தும், சசிகலாவை நீக்க இன்னும் நடவடிக்கை எடுக்காதது குறித்தும் ஓ.பி.எஸ். கேட்டதாக தெரிகிறது. அதற்கு அமைச்சர்கள் இருவரும், ‘சசிகலாவை எப்படி நியமனம் செய்தோமோ, அதேபோல நாம் இணைந்தபிறகு பொதுக்குழுவை கூட்டி நீக்கலாம்’ என பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல ஜெ. மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் சாதகமான நிலைப்பாடை நான் இணைந்து எடுக்கலாம் என அமைச்சர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

‘எந்த முடிவாக இருந்தாலும், என்னை நம்பி வந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகுதான் கூற முடியும்’ என ஓ.பி.எஸ். தெரிவித்ததாக அமைச்சர்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர். தங்கமணியும், வேலுமணியும் முதல்வர் எடப்பாடியின் நம்பிக்கையான பிரமுகர்களாக பார்க்கப்படுபவர்கள்! எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேரடி தூதர்களாக இவர்களை ஓ.பி.எஸ். எடுத்துக்கொண்டார். இவர்கள் குறிப்பிட்ட தகவல்களையும் இன்று மாலை தனது ஆதரவு நிர்வாகிகளிடம் தெரிவித்து கருத்து கேட்கவிருக்கிறார் ஓ.பி.எஸ்.

மொத்த மீடியா, அரசியல் பார்வையாளர்களின் பார்வை, கிரீன்வேஸ் சாலையில் ஓ.பி.எஸ். வசிக்கும் அரசு இல்லத்தில் படிந்திருக்கிறது.

×Close
×Close