சனி பகவானை வழிபட்ட ஓ.பி.எஸ் : சிக்கல்களில் விடுபட சீனியர் நிர்வாகிகளுடன் பயணம்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சனி பகவான் ஸ்தலத்திற்கு ஓ.பி.எஸ். தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று வழிபட்டார்.

அரசியல் சிக்கல்களில் இருந்து விடுபட மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சனி பகவான் ஸ்தலத்திற்கு ஓ.பி.எஸ். தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று வழிபட்டார்.

பொதுவாக ஆன்மீக தலங்களுக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் சகிதமாக செல்வதில்லை. தனிப்பட்ட பயணமாக குடும்பத்தினரை அழைத்துச் சென்று வழிபட்டு திரும்புவது வழக்கம். ஆனால் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணித் தலைவரான ஓ.பன்னீர்செல்வம், ஆகஸ்ட் 12-ம் தேதி (நேற்று) கட்சியின் சீனியர் நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், செம்மலை, மனோஜ்பாண்டியன் ஆகியோருடன் மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள ஷிங்னாபூர் என்ற இடத்தில் உள்ள சனி பகவான் ஆலயத்திற்கு சென்றார்.

முன்னதாக இதே நிர்வாகிகளுடன் டெல்லிக்கு சென்று 11-ம் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைக்கு உரிமை கோரி தாங்கள் ஏற்கனவே தொடுத்திருக்கும் வழக்குக்கு வலு சேர்க்கும் வகையில், எடப்பாடி தரப்பு டி.டி.வி.யை நீக்கி நிறைவேற்றிய தீர்மான நகலையும் தேர்தல் ஆணையத்தில் இவர்கள் சமர்ப்பித்தனர். அங்கு அன்று பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கவில்லை.

‘காட் பாதரை’ பார்க்க முடியாவிட்டாலும், ‘காட்’-ஐ தரிசிக்கும் முடிவுடன் அங்கிருந்து மொத்தமாக மஹாராஷ்டிராவுக்கு பயணமானார்கள். ஆரம்பத்தில் இவர்கள் அங்குள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றிருப்பதாகவே தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இவர்கள் சென்ற ஷிங்னாபூர் சனி பகவான் ஆலயம், ஷீரடியில் இருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கிறது.

ஓ.பி.எஸ். ஆட்சியில் இருந்து இறங்கிய பிறகு அவருக்கு தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இமேஜ் கூடவே செய்தது. அதேசமயம் அதிகாரத்தை நோக்கிய அவரது பயணத்தில் எந்த சாதக அறிகுறிகளும் இல்லை. எடப்பாடி அரசை இவர் கவிழ்ப்பார் என திமுக.வும், திமுக கவிழ்க்கும் என ஓ.பி.எஸ்.ஸும் காத்திருந்ததுதான் மிச்சம்! இவர்கள் இருவரும் கைகுலுக்கினால், அரசியல் ரீதியாக இரு கட்சிகளுக்குமே அது பின்னடைவாக அமையும் என்கிற பயமும் இரு தரப்புக்கும் இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, சமீப நாட்களாக ஓ.பன்னீர்செல்வத்தின் இமேஜை அசைத்துப் பார்க்கும் ஒரு அம்சமாக அவரது சொந்த மாவட்டத்தில் உள்ள கிணறு பிரச்னை தலைதூக்கியிருக்கிறது. தேனி மாவட்டம் லட்சுமிபுரம் என்ற கிராமத்தில் ஓ.பி.எஸ். மனைவி பெயரிலான பண்ணையில் வெட்டப்பட்ட ராட்சத கிணறில் இருந்து பக்கத்து ஊர் தோட்டத்திற்கு குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்வதாகவும், இதனால் லட்சுமிபுரம் மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

‘அரசியலுக்கு வந்து வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டதோடு, ஒரு கட்சியின் தலைவராகவும் இருக்கும் ஓ.பி.எஸ். அந்த கிணறை தங்கள் கிராமத்திற்கே தந்தால் என்ன?’ எனக் கேட்டு லட்சுமிபுரம் ஊர் மக்கள் போராட ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் ஊர் மக்களுக்கு அந்த கிணற்றை விலைக்கு தருவதாக கூறிய ஓ.பி.எஸ். தரப்பு, பிறகு தங்களுக்கு நெருக்கமான மற்றொருவர் பெயரில் பத்திரம் எழுதி வைத்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் அனுமார் வால் போல முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது.

இது போன்ற சிக்கல்களால் நொடிந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது சாதக பலன்களை பார்த்தபோது சனியின் பலம் குன்றியிருப்பதாக தெரிய வந்ததாம். அதைத் தொடர்ந்தே இந்த மஹாராஷ்டிரா பயணம்! அந்த ஆலயத்தில் சனி பகவானுக்கு பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டு, கட்சி நிர்வாகிகள் சகிதமாக ‘ரிட்டர்ன்’ ஆகிறார் ஓ.பி.எஸ்.! இதன் பலன், அடுத்தடுத்த நாட்களில் அரசியல் ரீதியாக தெரிய ஆரம்பித்துவிடும் என நம்புகிறது ஓ.பி.எஸ். தரப்பு!

×Close
×Close