/indian-express-tamil/media/media_files/2025/10/12/chennai-omni-bus-2025-10-12-15-46-34.jpg)
Omni Bus Fare Hike Diwali Bus Ticket Price Minister Sivasankar chennai Omni Bus Ticket Price Hike
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுப்பது வழக்கம். சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள் ரயில், அரசுப் பேருந்து மற்றும் ஆம்னி பேருந்து சேவையை நம்பி உள்ளனர். வரும் 20ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்தைவிட டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளதாகப் பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை:
இந்தக் கட்டண உயர்வு குறித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அரியலூர் மாவட்டம் திருமானூரையடுத்த புங்கங்குடி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடத்தை (அரியலூர் - சுண்டக்குடி வழித்தடத்தை ஆதனூர் வரை நீட்டிப்பு) கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
"கடந்த ஆண்டு தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு சார்பில் ஒரு நியாயமான கட்டண விகிதத்தை அறிவித்தோம். கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது மக்கள் எந்தப் பிரச்சினையும் இன்றிப் பயணம் செய்தனர்.
நாளைக்குள் குறைக்காவிட்டால் நடவடிக்கை:
ஆனால், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை முன்பதிவில், 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டண விகிதத்தை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அந்த ஆம்னி பேருந்து நிறுவனங்கள் நாளைக்குள் தாங்களாகவே அந்த அதிக கட்டணத்தைக் குறைக்காவிட்டால், தீபாவளிக்கு முன்பாகவே அந்தப் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இந்தக் கட்டண வசூலைக் கண்காணிக்க, போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேரடியாகச் சென்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.
தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து இதுகுறித்துப் பேச, போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் காவல்துறையுடன் இணைந்து விரைவில் ஒரு ஆலோசனைக் கூட்டமும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது," என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
எனவே, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.