சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணியின் போது பிகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையும், சின்னமலை முதல் விமானநிலையம் வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பறக்கும் பாதை மட்டுமல்லாமல் சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு - நேரு பூங்கா இடையேயான சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது.
அதேபோல், ஏனைய இடங்களில் மெட்ரோ ரயில் சேவை அளிக்கும் பொருட்டு நகரத்தின் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை ரிப்பன் பில்டிங் எதிரே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அம்ரேந்தர் ராம் என்பவர் இரும்பு கம்பி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பனியின் போது அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகர பேருந்து மற்றும் கார் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.