டிடிவி.தினகரன் அணியில் 7 எம்.பி.க்களும், 21 எம்.எல்.ஏ.க்களும் இடம் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் அணி மாறியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக அணிகள் இடையிலான உரசல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக.வின் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்து பொதுக்குழுவை கூட்டுகின்றன. இதில் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கவும், டிடிவி.தினகரனை கட்சியை விட்டு நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
எனவே அதற்குள்ளாக எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் ‘செக்’ வைக்கும் முயற்சியில் டிடிவி.தினகரன் இறங்கியிருக்கிறார். அதன் ஒரு கட்டமாக ஆகஸ்ட் 22-ம் தேதி டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். எனவே அரசியல் சாசன சட்ட அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுங்கள்’ என 19 பேரும் தனித்தனியாக கேட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என கேட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் கவர்னரை சந்தித்தனர். அப்போது கவர்னர், ‘இது அவர்களின் உட்கட்சிப் பிரச்னை. அவர்களில் யாரும் கட்சி மாறவில்லை. எனவே இதில் நான் நடவடிக்கை எடுக்க ஏதுமில்லை’ என கை விரித்தார். திமுக சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் கவனத்திற்கும் இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில் இன்று (செப். 7) டிடிவி.தினகரன் தனது அணியினருடன் கவர்னர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் அளித்த கடிதங்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் டிடிவி.தினகரன் தரப்பில் 11 பேர் பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டது. மதியம் 12.30 மணிக்கு இவர்களுக்கு ‘அப்பாய்ன்மென்ட்’ வழங்கப்பட்டது.
அதன்பேரில் தனது அணியில் 7 எம்.பி.க்கள் மற்றும் 3 எம்.எல்.ஏ.க்களுடன் இன்று நண்பகல் 12 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனுக்கு டிடிவி.தினகரன் வந்தார். அவருடன் கவர்னரை சந்திக்க அனுமதி பெற்றவர்களின் பட்டியல் இது..
1.டிடிவி.தினகரன் (துணைப் பொதுச்செயலாளர், அதிமுக (அம்மா) அணி), 2.ரத்தினசபாபதி (அறந்தாங்கி எம்.எல்.ஏ), 3.கலைச்செல்வன் (விருத்தாசலம் எம்.எல்.ஏ.), 4.கருணாஸ் (திருவாடனை எம்.எல்.ஏ), 5.ஏ.பி.நாகராஜன் (கோவை எம்.பி.), 6.விஜிலா சத்யானந்த் (ராஜ்யசபா எம்.பி.), 7.செங்குட்டுவன் (வேலூர் எம்.பி.), 8.உதயகுமார் (திண்டுக்கல் எம்.பி.), 9.கோகுல கிருஷ்ணன் (ராஜ்யசபா எம்.பி.), 10.நவநீதகிருஷ்ணன் (ராஜ்யசபா எம்.பி), 11.ராதாகிருஷ்ணன் (விருதுநகர் எம்.பி.).
அதாவது, 3 எம்.எல்.ஏ.க்கள், 4 மக்களவை எம்.பி.க்கள், 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் ஆகியோருடன் கவர்னரை சந்தித்தார் டிடிவி.தினகரன். இதில் குறிப்பிடத்தக்க விசேஷம் டிடிவி.தினகரனுடன் கவர்னர் மாளிகைக்கு வந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ஆகஸ்ட் 22-ம் தேதி கவர்னரிடம் கடிதம் கொடுத்த பட்டியலில் இடம் பெறாதவர்கள். முதன்முதலாக இவர்கள் அதிகாரபூர்வமாக தங்களை டிடிவி.தினகரன் அணியாக பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் 22 ஆனதாக கூறப்பட்டது. ஆனால் டிடிவி.தினகரன் அணியினர் கவர்னர் மாளிகையில் காத்திருந்த அதே நேரத்தில், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் அறையில் வந்து காத்திருந்தார். இவர் டிடிவி அணி சார்பில் கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர்! சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு 19 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்கவிருக்கும் சூழலில், ஜக்கையன் மட்டும் தனியாக சபாநாயகரை சந்திக்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலமாக ஜக்கையனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்கள் பக்கம் இழுத்துவிட்டதாக கூறப்பட்டது. சபாநாயகரை சந்தித்து திரும்பிய ஜக்கையன், முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக திரும்பியதை உறுதி செய்தார். எனவே டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆனது. 7 எம்.பி.க்கள், 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை டிடிவி.தினகரன் தக்க வைத்திருப்பது, இன்னமும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மிரட்டல்தான்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.