டிராக்டர் பறிமுதலால் திருப்பூரில் மீண்டும் ஒரு விவசாயி தற்கொலை நடந்திருக்கிறது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா, மலையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதன் நேற்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் விவசாயிக்கு சொந்தமான டிராக்டரை அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஐப்தி செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இதை அறிந்து வழி மறித்து கேட்ட போது தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளனர் . இதனால் அவமானம் தாங்காமல் பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாண்டு போயுள்ளார்.
இதே நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தான் சோழன் குடிகாடு பாலன் என்ற விவசாயியை தாக்கி டிராக்டரை பறி முதல் செய்ததும், தேசிய அளவில் இப்பிரச்சனை பெரிதான பிறகு டிராக்டரை ஒப்படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
கடுமையான வறட்சியின் பாதிப்பிலிருந்து விவசாயிகள் இன்னமும் மீளாத நிலையில் தனியார் நிதி நிறுவனங்கள் ஐப்தி போன்ற கடுமையான நடவடிக்கையில் ஈடுபடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
எனவே, விவசாயியின் தற்கொலைக்கு காரணமான நிதிநிறுவன ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஐப்தி செய்யப்பட்ட டிராக்டரை திரும்ப ஒப்படைக்க வேண்டும். விவசாயி பெற்றிருந்த கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென்று தமிழக ஆம்ஆத்மிகட்சி கோருகிறது.
விவசாயிகளின் அடிப்படை தேவையான தண்ணீர் போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியாத மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது அவசியமாகிறது விவசாயிகளை தற்கொலைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் ஆகையால் தமிழக அரசு, தனியார் நிதி நிறுவனங்கள் தன்னிச்சையாக ஐப்தி நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியிருக்கிறார்.