விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ம.வெள்ளையாபுரம் கிராமத்தில் ஓர் ஆண், இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்தி பரவியது. இதுகுறித்து அச்சாகியிருந்த திருமண அழைப்பிதழ், சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஊடகங்களும் விருதுநகர் மாவட்ட சமூகநல அதிகாரிகளும், காவல்துறையினரும் வெள்ளையாபுரம் சென்று விசாரணையில் இறங்கினார்கள்.
இந்நிலையில், “அறியாமல் தவறு செய்து இரண்டு பெண்களின் பெயர்களைப் போட்டு பத்திரிகை அடித்துவிட்டோம், என் மகள் ரேணுகாதேவிக்கும் என் தங்கை மகன் ராமமூர்த்திக்கும்தான் திருமணம் நடைபெறவுள்ளது'' என்று விருதுநகர் மாவட்ட சமூகநலஅலுவலரிடம், மணப்பெண்களில் ஒருவரான ரேணுகாதேவியின் தந்தை அழகர்சாமி குடும்பத்தோடு வந்து எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்தார். சமூக நல அலுவலர்கள் அவர்களை எச்சரித்தும், தகுந்த ஆலோசனை வழங்கியும் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விகடன் வெளியிட்டுள்ள செய்தியில், “ரேணுகா தேவிக்கு வயது 20 ஆகிறது, என் தங்கை மகன் ராமமூர்த்திக்கு 30 வயதாகிறது. என் தம்பி மகள் காயத்ரி உடல் வளர்ச்சியில்லாமல் வீட்டிலேயே இருக்கிறாள். அவளுக்குத் திருமணம் செய்ய வாய்ப்பில்லை, அவளை சந்தோஷப்படுத்த அவள் பெயரையும் சேர்த்து பத்திரிகையில் அச்சடித்துவிட்டனர். அவ்வளவுதான், ஆனால், உண்மையிலேயே ரேணுகாதேவிக்கும், ராமமூர்த்திக்கு மட்டும்தான் திருமணம். இரண்டு பெண்களின் பெயரைப் போட்டு அப்படிப் பத்திரிகை அடித்தது தப்புதான்’’ என்றார். அதன் பின்னர், புதிதாக அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழையும் காட்டினார்.
“ராமமூர்த்திக்கு இரண்டு பெண்களையும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, திருமண ஏற்பாடுகளை இரண்டு குடும்பத்தினர் செய்தது உண்மைதான். அழைப்பிதழ் மட்டும் வெளியே தெரியாமல் போயிருந்தால் அப்படியே நடந்திருக்கும். வெளியூரில் வேலை செய்யும் நண்பருக்கு அனுப்பிய பத்திரிகையை அவர் வாட்ஸ்ஆப்பில் ஷேர் செய்ததால்தான் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தது. தெரியாமல் காயத்ரியின் பெயரை அடித்துவிட்டோம் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை, அப்படி என்றால் இரண்டு பெண்களின் பெற்றோர் பெயரையும் பத்திரிகையில் போடவேண்டிய அவசியமில்லையே..? உடம்பு சரியில்லாத பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பதாகச் சொல்லி, அவர் பெயரை இப்படி திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டது நாகரிகமற்ற செயல். இருதார திருமணமே சட்டப்படி தவறு, அதையும் ஒரே நேரத்தில் செய்ய நினைத்தது அதைவிடத் தவறு, இந்தப் பகுதியில் அற்பக் காரணங்களுக்கு இரண்டு பெண்களைத் திருமணம் செய்வது சமூகரீதியாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது” என்று வருத்தப்படுகின்றனர் இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்.
இந்தச் சமூகத்தினர் தாலி கட்ட மாட்டார்களாம். கரம் கோத்து திருமண பந்தத்தை தொடங்குவார்களாம். எங்கே காவல்துறை தன்னை கைது செய்து விடுமோ என்று பயந்து மாப்பிள்ளை ராமமூர்த்தி எஸ்கேப் ஆகி, பின்னர், புது பத்திரிகை அடித்து, சமூக நல அலுவலரிடம் மனு கொடுத்த பின்புதான் ஊருக்குள் வந்திருக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.