Advertisment

ஓராண்டில் வேதனையிலும் வேதனை : ஜி.ஆர் விமர்சனம்

அதிமுகவின் இரு அணிகளும், ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பாதுகாக்கவும், அரசு நிர்வாகத்தை ஊழல் சாம்ராஜ்யமாக நடத்துவதற்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளது

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஓராண்டில் வேதனையிலும் வேதனை : ஜி.ஆர் விமர்சனம்

மாரிக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Advertisment

அதிமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு கண்டுள்ள தோல்வியை மூடி மறைக்க, நாளேடுகளில் பகட்டான விளம்பரங்களைக் கொடுத்துள்ளது.

ஜெயலலிதாவின் உடல்நிலை, பிறகு அவரது மரணம், அதன் பிறகு அக்கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப்போட்டி ஆகியவற்றால் பெரும்பாலான காலம் செயல்படாத அரசாகவே இருந்துள்ளது.

விவசாயிகள் யாரும் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்து அதிமுகவின் அணுகுமுறைக்கு இது ஒரு சோறு.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பொதுவிநியோக முறையையும் சீரழித்திருக்கிறது இந்த அரசு. ஏறத்தாழ ஏழு மாதங்களாக உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை அடியோடு நிறுத்தப்பட்டிருக்கின்றன. அரிசிக்கு பதிலாக கோதுமையை திணிக்கும் நிலை உள்ளது. ஆதாரைக்காட்டி 13 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன்பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது.

கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் ரூ. 5 - 10 விலைக்கு விற்கப்படுகிறது.  மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறை தொடர்கின்றன. கூலிப்படையினரால் கொலைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்டு நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் மக்கள் மீது காவல்துறையை மாநில அரசு ஏவி விடுகிறது.  ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சென்னை பள்ளிக்கரணை, மதுரை காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வரும் பெண்கள் மீது காவல்துறை அத்துமீறியும், அநாகரிகமாகவும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள 3000த்திற்கு மேற்பட்ட கடைகளை மக்கள் வசிக்கும் பகுதிகளில் திறப்பதன் மூலம் படிப்படியான மதுவிலக்கு என்ற தனது கொள்கைகளிலிருந்து அதிமுக அரசு விலகிச் செல்கிறது.

ஊழல், முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள் அரசின் எல்லாத்துறைகளிலும் கோலோச்சுகிறது. பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் முதல் கீழ்நிலை பணியாளர்  வரை அரசுப்பணிகளில் ஒவ்வொரு நியமனத்திற்கும் விலை தீர்மானிக்கப்பட்டு கையூட்டு கொடுத்தால்தான் வேலை என்பது விதியாகிவிட்டது.

பள்ளிக்கல்வித்துறையில் வரவேற்கத்தக்க சில சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், உயர்கல்வி மற்றும் பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் தனியார் கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவற்றில் எல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளாமல் காலம் கடத்துகிறது.

அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளும் மாநிலத்தின் மக்களின் நலன்களை காவு கொடுத்து விட்டு பாஜகவோடு நெருக்கமாக செல்வதற்கு போட்டி போட்டு வருகின்றனர். தமிழக மக்கள் தாங்கொணாத் துயரங்களில் தவித்துக் கொண்டிருக்கும்போது, அதிமுகவின் இரு அணிகளும், ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பாதுகாக்கவும், அரசு நிர்வாகத்தை ஊழல் சாம்ராஜ்யமாக நடத்துவதற்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளதுதான் கடந்த ஓராண்டில் நாம் கண்டுவருவது.

மொத்தத்தில் அதிமுகவின் ஓராண்டு ஆட்சி மாநில மக்களுக்கு வேதனையிலும் வேதனையே.

இவ்வாறு அறிக்கையில் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment