தமிழ்நாட்டில் 21 புதிய எண்ணெய் கிணறுகளை தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா முழுவதும் 31 இடங்களில் சிறிய அளவில் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, பிப்ரவரி 15-ஆம் தேதி செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அங்கு பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போராட்டக் குழுவினர் சந்தித்தனர். அப்போது தமிழக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கவே கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து, இந்த திட்டத்திற்கு மாநில அரசு வழங்க வேண்டிய அனுமதிகளை வழங்காது என முதல்வர் உறுதியளித்த பின்னரே இந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக நெடுவாசல் போராட்டக்குழுவினர் அறிவித்தனர்.
இந்தச் சூழ்நிலையில் இன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பதிலளித்துள்ள ஓ.என்.ஜி.சி, 2011-ஆம் ஆண்டு கருத்து கேட்பு கூட்டத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டடுள்ளது என கூறியுள்ளது.