/tamil-ie/media/media_files/uploads/2017/06/TN-sand-app.jpg)
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மணல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
இணையதளம் மற்றும் செல்போன் செயலி ஆகியவற்றின் மூலம், பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழ்நாடு மணல் இணைய சேவை www.tnsand.in என்ற இணையதளத்தையும், tnsand என்ற செல்போன் செயலியையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். இச்சேவை மூலம், மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும், மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கணினி மென்பொருள் மற்றும் செல்போன் செயலியை பயன்படுத்துவது முறை குறித்து பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், அரசு மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுப்பணித்துறையின் வாயிலாக 28.6.2017 (இன்று) முதல் 30.6.2017 வரை பயிற்சியளிக்கப்படும் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் (1.7.2017) முதல் உபயோகிப்பாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் இந்த சேவை மூலம் மட்டுமே பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் தங்களுடைய மணல் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.