சசிகலா கட்சியின் உறுப்பினர்; டி.டி.வி. அதுவும் கிடையாது என கே.பி.முனுசாமி கூறினார்.
குடிதண்ணீர் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனையில் தமிழக அரசின் அனுகுமுறையை கண்டித்து வரும் 10-ம் தேதி அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிகோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வந்தனர். போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துவிட்டு கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது..
தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. அதனை தீர்க்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க அரசிடம் எந்தநடவடிக்கையும் இல்லை. தூங்கிக் கொண்டிருக்கும் அரசை எழுப்ப அறப்போராட்டம் நடத்த உள்ளோம்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளோம். நினைவூட்டலுக்காக மீண்டும் இன்று மனு கொடுத்தோம். காவல்துறை அனுமதிக்கும் இடத்தில் எங்களது போராட்டம் நடைபெறும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் மரணத்திற்கு நீதிவிசாரணை, சசிகலா குடும்பத்தை முழுவதுமாக கட்சியில் இருந்து வெளியேற்றுவது ஆகிய 2 கோரிக்கையை நிறைவேற்றினால் இரு அணிகளும் ஒன்றினைய எந்த தடையும் இல்லை.
கட்சியில் இல்லாத ஒரு நபர் டிடிவி. எனவே அவரது சுற்றுப்பயணம் குறித்து கருத்து சொல்ல விரும்ப வில்லை. சசிகலா மட்டும் தான் கட்சியில் உள்ளார். அவரை வீட்டு வேலைக்காக தான் கட்சியில் சேர்த்தார் ஜெயலலிதா. வீராணம் திட்டத்தில் ஊழல் புகாரில் சிக்கிய தி.மு.க.வின் துரைமுருகன் எங்களைப் பற்றி பேச அருகதையில்லை.
இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.