பேரவையில் ஜெ. படம் திறப்பு : அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் : ராமதாஸ் ஆவேசம்

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கூட அவரால் முதலமைச்சராகவோ, சட்டப்பேரவை உறுப்பினராகவோ இருக்க முடியது. அந்த அளவுக்கு , வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக்குவித்தது தொடர்பான வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

By: Updated: May 26, 2017, 11:59:52 AM

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்தை சட்டபேரவையில் திறப்பது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொள்ள கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைக் கூடத்தில் ஜெயலலிதா உருவப்படத்தை திறந்து வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான விழாவை பிரதமர் நரேந்திர மோடி விரும்பும் நாளில் நடத்துவதற்கு தயாராக இருப்பதால், படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். ஊழல் குற்றவாளிக்கு புகழ் மகுடம் சூட்ட நடைபெறும் இந்த முயற்சி மிகக்கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தைப் பொறுத்தவரை முதலமைச்சராக பணி செய்தவர்கள் அனைவரின் படத்தையும் சட்டப்பேரவைக் கூடத்தில் திறந்து வைத்து மரியாதை செலுத்துவது மரபாக உள்ளது. ஜெயலலிதா நேர்மையான முதலமைச்சராக இருந்திருந்தால் அவரது படத்தை சட்டப்பேரவைக் கூடத்தில் திறப்பதில் யாருக்கும் எந்த எதிர்ப்பும் இருக்கப் போவதில்லை. ஆனால், ஜெயலலிதா நேர்மையான முதலமைச்சராகவும் இல்லை; பேரவைக் கூடத்தில் படத்தை திறந்து வைக்கும் அளவுக்கு எதையும் சாதிக்கவும் இல்லை. மாறாக முதலமைச்சராக இருந்த போது, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதன் காரணமாக அந்தப் பதவியில் இருந்து இருமுறை தூக்கி எறியப்பட்டவர். சட்டப்பேரவைக்குள் நுழையும் தகுதி இல்லை என்று கூறி 2001-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டவர்.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தாலும், அந்த அரசின் பதவிக்காலம் இன்னும் 4 ஆண்டுகளுக்கு இருக்கும் போதிலும், இன்றைய நிலையில் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கூட அவரால் முதலமைச்சராகவோ, சட்டப்பேரவை உறுப்பினராகவோ இருக்க முடியது. அந்த அளவுக்கு , வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக்குவித்தது தொடர்பான வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரின் உருவப்படம் பேரவைக் கூடத்தில் திறக்கப்படுவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதத்தை ஏற்க முடியாது. சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பாக ஜெயலலிதா இறந்துவிட்டதால், இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் மரபின்படி ஜெயலலிதா குறித்து எந்தத் தீர்ப்பும் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, ஜெயலலிதா ஊழல் மூலம் குவித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே சசிகலா மற்றும் அவரது உறவினர்களை தமது இல்லத்தில் தங்க வைத்தார் என்று நீதிபதிகள் அவர்களது தீர்ப்பில் கூறியிருப்பதில் இருந்தே ஜெயலலிதா குறித்த உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம் என்பதால் அவற்றை அகற்ற ஆணையிடக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் விசாரணையை விரைந்து முடிக்க ஒத்துழைக்காத தமிழக அரசு, அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பாகவே ஜெயலலிதாவின் உருவப்படத்தை பேரவைக் கூடத்தில் திறப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். இது வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, ஆட்சி அதிகாரத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் இழைக்கப்படும் அவமானம் ஆகும்.

தமிழக சட்டப்பேரவைக் கூடத்தில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், காமராஜர், இராஜாஜி, அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இணையாக ஜெயலலிதாவின் படத்தை திறப்பது அந்த தலைவர்களுக்கு செய்யப்படும் அவமரியாதை ஆகும். இந்த முயற்சிக்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி துணைப்போகக்கூடாது. தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசும் இப்படி ஒரு வரலாற்றுத் தவறை செய்வதை கைவிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Opening the jaya picture the act of disrespecting the constitution ramadoss

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X