நவம்பர் 8-ம் தேதி நடைபெற இருக்கும் பாஜக எதிர்ப்புப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. இடதுசாரிகள்-காங்கிரஸ் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம்.
நவம்பர் 8-ம் தேதி, இந்தியாவில் உயர் மதிப்பு ரூபாய் ஒழிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுகிறது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை, பெரும் தோல்வியில் முடிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எனவே நவம்பர் 8-ம் தேதியை துக்க தினமாக அனுசரிக்க நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன.
ஆனால் இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதுமே எதிர்க்கட்சிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை. காரணம், இடதுசாரிக் கட்சிகளில் பெரிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் காங்கிரஸுடன் கைகோர்ப்பதில் உள்ள இருவேறு கருத்துகள்தான்! எனவே டெல்லியில் இடதுசாரி கட்சிகள் மட்டுமே தனியாக கூடி ஆலோசித்து, நவம்பர் 8-ம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்தன.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தின. ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் அகில இந்திய நடைமுறையை பின்பற்றி இடதுசாரிகள் தனியாகவே போராட்டம் நடத்துகிறார்கள்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ (மாலெ-லிபரேசன்) கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ். குமாரசாமி, எஸ்யுசிஐ(சி) கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ. ரெங்கசாமி ஆகியோர் விடுத்த கூட்டறிக்கை வருமாறு:
கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் நிராகரித்து பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்கம் இந்திய பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்வை சூறையாடியுள்ளது.
இடதுசாரிக் கட்சிகள் எச்சரித்தபடியே பண மதிப்பு நீக்கம் இந்திய பொருளாதாரத்தின் மீதும், இந்திய மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் தொடர் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்திற்கு, கருப்பு பணமீட்பு, கள்ளப்பணம் தடுப்பு, பயங்கரவாதிகள் பணப்பரிமாற்ற தடை என அரசால் சொல்லப்பட்ட எந்தவொரு நோக்கமும் நிறைவேறவில்லை.
கருப்பு பணம் பதுக்கியிருந்ததாக ஒரு நபர் கூட தண்டிக்கப்படவில்லை. மொத்தக் கருப்பு பணமும் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு விட்டது. கள்ளப்பணமும் ஒழிக்கப்படவில்லை. பயங்கரவாத தாக்குதல் தடுக்கப்படும் என்றார்கள். மாறாக, இந்த காலத்தில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு படை வீரர்களும், இராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஊழல் இரட்டிப்பாகியிருக்கிறது. மொத்தத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. அது சிறு-குறு தொழில்கள் மற்றும் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக சீர்குலைத்திருக்கிறது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மூன்றாவது முக்கியப் பங்களிப்பு செலுத்துகிற முறைசாரா தொழில் அடியோடு அழிக்கப்படுகிறது.
மத்திய பாஜக அரசு 2014 தேர்தல் நேரத்தில் சொல்லப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. இதனால் விவசாயம், தொழில், சேவைத்துறை அனைத்தும் மிகக்கடுமையான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலை, வேலையிழப்பு, வேலையின்மை, புதிய தொழில் உருவாகாதது அனைத்தும் மக்கள் மத்தியில் பேரிடியாய் இறங்கியுள்ளது.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என தேர்தல் வாக்குறுதி சொல்லப்பட்டாலும் ஏற்கனவே இருந்த வேலைவாய்ப்புகளும் மறைந்தது தான் இக்காலத்தில் மிகத்துயரமான நிலை. விவசாயிகள் தற்கொலையும் இக்காலத்தில் அதிகரித்திருக்கிறது.
“வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது” போல பொருளாதாரத்தை முற்றிலும் நிலைகுலையச் செய்யும் அடுத்த நடவடிக்கையாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது எனவே தான் இடதுசாரிக் கட்சிகள் இந்திய நாடு முழுவதும் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8- ஆம் தேதியை கண்டன தினமாக கடைபிடிப்பது என டெல்லியில் கூடிய 6 இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த கண்டன தின அனுஷ்டிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் இன்று (28.10.2017) இடதுசாரி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் நா. பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ-லிபரேசன்) சார்பில் மாநில நிலைக்குழு உறுப்பினர் தோழர். ஏ.எஸ். குமார், மாநிலக்குழு உறுப்பினர் ஆர். வித்யாசாகர், எஸ்யுசிஐ(கம்யூனிஸ்ட்) சார்பில் மாநிலச் செயலாளர் தோழர். ஏ. ரெங்கசாமி, மாநிலக்குழு உறுப்பினர் பி. சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நவம்பர் 8- ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை நேர தர்ணா நடத்த வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.
இதே 8-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக தனியாக ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸை அதில் பங்கேற்க அழைத்தால், ஆதரவு கொடுக்கும் மனநிலையில் இருக்கிறது. ஆனால் மு.க.ஸ்டாலினிடம் இருந்து இதுவரை அழைப்பு இல்லை. விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் நிலைப்பாடும் இதுதான்! பாஜக-வுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க இடதுசாரிகள் ஒப்புக் கொள்ளாததில் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.