”அராஜக ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம்”, என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மதுரவாயல் வடக்கு பகுதி திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆண்டுகால சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சி பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “1957-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் குளித்தலை தொகுதி திமுக வேட்பாளராக கலைஞர் போட்டியிட்டபோது வேட்பாளர்களுக்கு விதவிதமான சின்னங்கள் ஒதுக்கப்பட்டாலும், கலைஞருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் உதயசூரியன். அந்த உதயசூரியன் சின்னத்தில் தான் 60 ஆண்டு கால வரலாற்றில் 13 முறை உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே தலைவர் கலைஞர். அவர் சாதனை எவராலும் முறியடிக்கப்படவில்லை.”, என கூறினார்.
மேலும், “2016-ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்றைக்கு குதிரை பேர ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் பினாமி அதிமுக அரசில் பல அவலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொழில் முதலீட்டில் தமிழகத்தை கடைசி இடத்திற்கு தள்ளியது மட்டுமல்லாமல், நம் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவுகளை சிதைக்கும் நீட் தேர்விற்கு விலக்கு பெற முடியாமல் இன்னும் மேல்முறையீடு செய்து கொண்டிருக்கிறோம் என நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கும் இந்த அரசை மக்கள் தூக்கியெறிய தயாராகி விட்டார்கள் என்பதை தமிழகம் முழுவதிலும் இருந்து எழும் எதிர்ப்புக் குரல்கள் மூலம் அறிய முடிகிறது.
இன்றைக்கு நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலத்தை கண்டுகொள்ளாமல் அங்கிருக்கும் அப்பாவி மக்கள் மீது வழக்குகள் போட்டு சிறையில் தள்ளியிருப்பது, குட்கா ஊழலில் சிக்கி தமிழக காவல்துறை மானத்தை கப்பலேற்றிய அதிகாரிகளோடு லஞ்சம் வாங்கி துணைபோன அமைச்சர் என அராஜக ஆட்சியின் அவலங்களை மக்களின் குரலாய் சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஒலித்துக்
கொண்டிருக்கிறது”, என பேசினார்.
அதுமட்டுமல்லாமல், ”எத்தனை தடைகள் வந்தாலும் பீனிக்ஸ் பறவையாய் நம்முடைய கழகம் எதிர்த்து நின்று வெல்லும். அந்த காலம் வெகுதூரத்தில் இல்லை. அராஜக ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம்.”, என பேசினார்.