Advertisment

சட்டசபையில் ஜெ. படம் திறக்க எதிப்பு : எடப்பாடிக்கு தகுதியில்லை என கே.பி.முனுசாமி பாய்ச்சல்

ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கக் கூடாது என்று திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கோர்டில் வழக்குத் தொடர்ந்தார்கள். கோர்ட் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டது.

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
jayalalithaa

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை பிதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, வரும் ஜூலை மாதம், சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்பட்டம் திறக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். அதை பிரதமர் மோடி திறந்து வைக்க வருமாறு அழைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisment

இது தமிழக எதிர்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தெரிவித்து இருந்தார். குற்றவாளி என்று கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை சட்டசபையில் எப்படி திறக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.

‘குற்றவாளியான ஒருவர் படத்தை சட்டசபையில் திறந்து வைப்பது மரபுப்படி நியாயம் அல்ல. தவறான முன் உதாரணமாகிவிடும். நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டே சட்டமன்றம் செயல்படுகிறது. இங்கு விதிகளும் மரபுகளும் மதிக்கப்பட வேண்டும். தேவகவுடா பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நேரம். காவிரி நடுவர் மன்ற தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சித்த கோஷ் இருந்தார். அவர் டெல்டா பகுதியில் ஆய்வு செய்ய தமிழகம் வந்தார். அவர் கோயில்களுக்கு சென்ற போது, பூர்ண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. இதையடுத்து தேவகவுடா, தமிழகம், பாண்டிச்சேரி, கேரளாவை பார்டியாக சேர்த்து, நீதிபதி சித்த கோஷை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதுதான், அவருக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தது.

publive-image

உடன் நான், சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. பிரதமர் என்பவர் அனைத்து மாநிலத்துக்கும் சொந்தக்காரராக இருக்க வேண்டும். தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த ஒருவர் எப்படி பிரதமராக பதவி ஏற்க முடியும்’ என்று கேட்டிருந்தேன்.

இந்த தகவல் உடனடியாக அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவுக்கு சொல்லப்பட்டது. அவர் தேவகவுடாவை அழைத்து, ‘பெங்களூரு ஐகோர்ட்டில் உள்ள மனுவை வாபஸ் பெற வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அவர் மனுவை வாபஸ் பெற்ற பின்னர்தான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சமீபத்தில் கூட காஞ்சிபுரத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருவதாக இருந்தது. குற்றவாளியை, ஜனாதிபதி சந்திப்பதா என்ற முனுமுனுப்பு எழுந்ததும், அவர் காஞ்சிபுரம் வருகையையே ரத்து செய்தார். இப்படி ஆயிரம் உதாரணங்களைச் சொல்லலாம். சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை திறக்கக் கூடாது. அதை திறக்க பிரதமர் சம்மதிக்கக் கூடாது’ என்றார்.

publive-image

ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவரை வழக்கில் இருந்து நீதிமன்றம் விலக்கிவிட்டதே... என்று கேட்ட போது, ‘சுப்ரிம் கோர்ட் தனது தீர்ப்பில் குன்ஹா தீர்ப்பை உறுதி செய்வதாக சொல்லியுள்ளது. குன்ஹா தீர்ப்புபடி ஜெயலலிதா குற்றவாளிதான். அவர் இறந்துவிட்டதால், அவர் வழங்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை’ என்றார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

திமுக தரப்பிலும் சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து விவாதித்து வருகிறார்கள்.

பாஜக மாநில தலைவர் தமிழிசையிடம் கேட்ட போது, ‘முன்னாள் முதல்வரின் படத்தை சட்டசபையில் திறக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் தரப்பில் கோரிக்கை பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை வைக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதில் ஒன்றும் தப்பில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று முடித்துக் கொண்டார்.

publive-image

ஜெயலலிதா பட திறப்பு விழா குறித்து புரட்சி தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியிடம் கருத்து கேட்ட போது, ‘ஜெயலலிதா எங்கள் தலைவர். அவர் படம் சட்டமன்றத்தில் திறந்து வைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் முதல்வராக இருப்பவர் மக்களாலோ, அல்லது எங்கள் தலைவராலோ அடையாளம் காட்டப்பட்டவராக இருந்தால் சந்தோசப்பட்டிருப்போம். அவர் சசிகலாவால் இந்த பதவிக்கு வந்தவர். குற்றவாளியாக சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமியான எடப்பாடிக்கு ஜெயலலிதாவின் படத்தை திறக்க தகுதி இல்லை’ என்றார்.

publive-image

அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர் கலைராஜனிடம் கேட்ட போது, ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கக் கூடாது என்று திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கோர்டில் வழக்குத் தொடர்ந்தார்கள். கோர்ட் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டது. அரசின் நலத்திட்டங்களில் எல்லாம் அம்மாவின் படம் வைக்கப்பட்டு வருகிறது. அதே போலதான் சட்டசபையில் அம்மாவின் படத்தை திறக்க இருக்கிறார்கள். இதில் சட்டமோ, மரபோ அதுவும் தடையில்லை’ என்றார்.

பிரதான எதிர்கட்சிகள் எதிர்ப்பை ஆளும் கட்சி எப்படி சமாளிக்க போகிறதோ!

Kp Munusamy Tamilisai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment