சட்டப்பேரவையில் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். மொத்தம் 157 நிமிடங்களுக்கு அவர் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். காலை 10.30 மணிக்கு உரை தொடங்கிய ஓ.பி.எஸ் மதியம் 1.30 மணிக்கு முடித்தார்.
பட்ஜெட் உரை தாக்கலின் போது பேசிய ஓ.பி.எஸ், "14வது நிதிக்குழு காலத்தில் 89% உயர்வை மட்டுமே தமிழ்நாடு பெற்றுள்ளது. கர்நாடகா 155.14%, மகாராஷ்டிரா 148.93%, குஜராத் 137.70%, கேரளா 149.82% உயர்வுகளை பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நிதி ஒதுக்குவதில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் தமிழகம் சிறப்பு உதவி மானியம் வழங்கக் கோரியது. ஆனால் இதுவரை மத்திய அரசு பதில் அளிக்கவில்லை" என வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை ஆளும் அதிமுக, பாஜகவின் கைக்கூலியாகவும், அவர்கள் சொல்வதை வாய்ப் பொத்தி கேட்கும் கட்சியாகத் தான் செயல்படுகிறது என்று இன்றுவரை எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, இன்றைய பட்ஜெட் தாக்கல் குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூட, "ஜி.எஸ்.டியால் பலர் பயன் அடைந்துள்ளனர் என துணை முதலமைச்சர் பட்ஜெட் உரையின் போது கூறியதில் இருந்தே அவர் மத்திய அரசிற்கு ஜால்ரா போடுகின்றார் என்பது நன்றாக தெரிகிறது" என விமர்சித்து இருந்தார்.
ஆனால், நிதி பகிர்வில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ஓ.பி.எஸ். கூறி இருப்பது அரசியல் அரங்கில் மிக முக்கியமான விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது. இதுநாள்வரை 'தெரிந்தும் தெரியாமலும்' என்கிற ரீதியில் பாஜகவை விமர்சித்த ஆளும் கட்சி, தற்போது நேரிடையாக பிரதமர் மோடியை தாக்கியிருப்பதாகவே இது பார்க்கப்படுகிறது.
இனி 'இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்' தரப்பை நம்பி பிரயோஜனமில்லை என்று பாஜக முடிவு செய்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் இந்த பேச்சு அதனை உறுதிப்படுத்தும் வகையிலையே அமைந்துள்ளதை மறுக்க முடியவில்லை.
மொத்தத்தில், மக்களின் நம்பிக்கையை பெற முடியாமலும், மத்தியில் ஆளும் அரசின் நம்பிக்கையை பெற முடியாமலும் எடப்பாடி தலைமையிலான அஇஅதிமுக அரசு அல்லல்படுகிறது என்பதே நிதர்சனம்!.