டெல்லியில் இருந்து கதை, திரைக்கதை, இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்ற அவர், இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்படவிருக்கும் விசாரணை கமிஷன் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க சிபிஐ விசாரணை கோரிய பன்னீர்செல்வம், தமிழக அளவிலான விசாரணையை ஏற்றுக் கொண்டுள்ளார். ஒருவேளை விசாரணை கமிஷன் வேண்டாம், கமிஷன் மட்டும் போதும் என பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டு விட்டாரா எனத் தெரியவில்லை என்றார்.
ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது சட்டப்படி தவறு. தமிழக அரசு இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
அணிகள் இணைப்பு குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின், டெல்லியில் இருந்து கதை, திரைக்கதை, இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்தார்.
அதிமுக-வின் அணிகள் இணைப்பு இறுதி கட்டத்தை எட்டி, நாளைக்குள் இணைந்து விடும் என கூறப்படும் நிலையில், ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.