பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிகார மோதல் காரணமாக அதிமுக பிளவு கண்டுள்ளது. எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக சந்தித்த அதே நிலையை தற்போதும் சந்தித்துள்ளது.
சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்தவர்கள், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் சேர்த்து மூன்று அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி, பன்னீர்செல்வம் தலைமையிலும், அதிமுக அம்மா அணி, சசிகலா தலைமையிலும் செயல்பட்டு வந்தனர். சசிகலா சிறை சென்றதும் தினகரன் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக அம்மா அணி, தினகரன் சிறை சென்றதும் முதல்வர் பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தினகரனை புறக்கணித்து விட்டு இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முயற்சிகள் டெல்லியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், குடியரசுத் துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக எடப்படியும், ஓபிஎஸ்-ம் டெல்லி சென்றனர். பதவியேற்பு விழா முடிந்ததும் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு முதல்வர் பழனிசாமிக்கு அனுமதி கிடைத்தது. பிரதமரை சந்தித்த முதல்வர் இரு அணிகளும் விரைவில் இணையும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
அதேசமயம், பிரதமர் மோடியை சந்திப்பதற்கான தேதி தள்ளிப் போனதால், காரணத்தால், மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள ஷிங்னாபூர் என்ற இடத்தில் உள்ள சனி பகவான் ஆலயத்திற்கு பன்னீர்செல்வம் சென்றார். கட்சியின் சீனியர் நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், செம்மலை, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ், அங்கிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள ஷீரடி சென்று சாய்பாபா ஆலயத்திலும் தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் டெல்லி திரும்பியுள்ளார்.
முன்னதாக, தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைக்கு உரிமை கோரி தாங்கள் ஏற்கனவே தொடுத்திருக்கும் வழக்குக்கு வலு சேர்க்கும் வகையில், எடப்பாடி தரப்பு டி.டி.வி.யை நீக்கி நிறைவேற்றிய தீர்மான நகலையும் தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் தரப்பினர் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இரு அணிகள் இணைப்பு நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக கூறப்படும் நிலையில், பிரதமருடனான பன்னீர்செல்வத்தின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.