ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அதிமுக-வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்தற்காக, முதலமைச்சர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். ஆனால், பன்னீர் செல்வம் தனது ராஜினாமா கடித்தத்தை ஆளுநருக்கு அனுப்பிய பின்னர், தான் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டேன் என்று பகிரங்கமாக தெரிவித்தார். இதனால், அதிமுக இரண்டாக பிளவு பெற்றது. இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் சிறைவாசம் சென்றார்.
ஜெயலலிதாவின் மறைவையடுத்து, ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே, அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு தான் ஒதுக்க வேண்டும் என சசிகலா தரப்பும், பன்னீர் செல்வம் தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன. இதனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
சசிகலா தரப்பில் அதிமுக அம்மா அணி என்றும், பன்னீர் செல்வம் தரப்பில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற இரண்டு அணிகள் உருவானது. இடைத்தேர்தல் நெருங்கிவந்த வேளையில் பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இதன்காரணமாக ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனையடுத்து, பிளவுபட்ட இரு அணிகளும் ஒன்றிணைய முயற்சித்து வருகின்றன. ஆனால், இரு அணிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பிளவுபட்ட அதிமுக ஒன்றிணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறும்போது: இரு அணிகளிடையே மோதல் முற்றியுள்ளது என்பதில் உண்மையில்லை. அது ஊடகங்களின் யூகம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக எப்படி இருந்ததோ, அதுபோன்ற அதிமுக-வை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். அதிமுக-வை ஒன்றிணைப்பதே எங்களின் நோக்கம் என்று கூறினார்.