புரட்சித் தலைவி அம்மா அணியை வலுப்படுத்தும் பணியில் ஓ.பி.எஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், விருதுநகரில் நேற்று நடைபெறவிருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை திருச்சி விமானம் வந்தடைந்தார் ஓ.பி.எஸ். அப்போது அவரை ஒருவர் கத்தியால் குத்த முயற்சி செய்ததாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சோழராஜன் என்பவரை கைது செய்து, அவரிடம் நடத்திய தீவிர விசாரணைக்குப் பின் பேட்டியளித்த போலீசார், "அவர் தீவிர அ.தி.மு.க. உறுப்பினர் என்றும், ரிக்ஷா தொழிலாளியான அவர், வேலைக்கு செல்லும்போது ஒரு சிறு கத்தியை கையோடு எடுத்துச் செல்வது வழக்கம். அப்படித்தான் கால் சட்டைக்குள் கத்தியை வைத்திருந்திருக்கிறார். பன்னீர் செல்வம் வந்த போது, விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, அவரது வேஷ்டி அவிழ்ந்ததால், கத்தி கீழே விழுந்தது. ஆனாலும் விமான நிலையத்தில் ஆயுதங்களுடன் செல்வது தவறு. அதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவித்துள்ளோம்" என தெரிவித்துள்ளனர்.
இதனால், விருதுநகரில் திட்டமிட்டப்படி பொதுக்கூட்டம் நடக்குமா என்ற கேள்வி கட்சியினர் இடையே ஏற்பட்டிருந்தது. 'அதெல்லாம் ஒன்றுமில்லை, திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும்' என்று ஓ.பி.எஸ். உறுதி கூறியதால், அவர் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ஒ.பன்னீர்செல்வம், ''ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை பதில் தரவில்லை. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் முதல்வராக இருந்தபோது கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்துக்கு நீர் திறக்க ஆந்திரா சென்று கோரிக்கை வைத்தேன். அ.தி.மு.க-வை தலைமையேற்று நடத்தும் தகுதி எங்களுக்குத்தான் உண்டு' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், "நடிகர் கமல்ஹாசன் உலக நடிகர். அரசியல் பற்றி பேசவதற்கும், விமர்சிப்பதற்கும் அவருக்கு உரிமை உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியும்-எதிர்க்கட்சியும் மறைமுகமாக கூட்டு வைத்து செயல்படுகின்றன. ஆளும் கட்சியை பற்றி வெளியில் குறை கூறும் திமுக, சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் பற்றி வாயே திறப்பதில்லை. தலைமைக்கழகம் செல்ல தனக்கும் அவைத்தலைவர் மதுசூதனனுக்கும் மட்டுமே உரிமை உண்டு" என்றும் அவர் தெரிவித்தார்.