சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை ஓபிஎஸ் திறக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் 2.80 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தில் 26.08.2015 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த மணிமண்டபத்தை அக்டோபர் 1-ம் தேதி காலை 10.30 மணியளவில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. உலக அளவில் பிரசித்தி பெற்றவரான மாபெரும் தமிழ் நடிகருக்கு கட்டப்பட்ட மணி மண்டபம் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்ளாமல் தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையைச் சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் ஜெயகுமாரும், துறை அமைச்சர் என்ற முறையில் கடம்பூர் ராஜூவும் கலந்துகொண்டால் போதும் என அரசு முடிவெடுத்தது சிவாஜி குடும்பத்தினரையும் அதிர வைத்தது.
இது தொடர்பாக நடிகர் பிரபு, அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘ஜெயலலிதா உயிரோடு இருந்தால், அவரே வந்து மணிமண்டபத்தை திறந்திருப்பார். முக்கியத்துவம் இல்லாத வகையில் இந்த விழாவை நடத்துவதும், முதல்வர் இந்த நிகழ்ச்சியை தவிர்ப்பதும் எங்களுக்கு வருத்தம் தருகிறது’ என்றார். அதேபோல சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘அமைச்சர்களை வைத்து மணிமண்டபத்தை திறக்க வேண்டாம். திரையுலக பிரபலத்தை வைத்து திறக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
நடிகை வாகை சந்திரசேகர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒட்டுமொத்த திரையுலமும் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும்’ என்றார். காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் சிவாஜியை தமிழக அரசு அவமானப்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.
அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் மணிமண்டபத்தை திறப்பதில், சிவாஜி ரசிகர்களுக்கு இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘சிவாஜி கணேசனாலேயே அரசியலுக்கு வந்து ஒரு எம்.எல்.ஏ.கூட ஆக முடியவில்லை’ என குறிப்பிட்டார். இதற்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதே அமைச்சர் ஜெயகுமாரை இந்த விழாவில் முன்னிலைப்படுத்துவது சரியல்ல என்பது அவர்கள் கருத்து.
நடிகர் பிரபு சில தினங்களுக்கு முன்பு, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே முதல்வரும் துணை முதல்வரும் சிவாஜி மணி மண்டப திறப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த ஒரு பேட்டியில், ‘முதல்வரே கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறப்பார்’ என்றார். ஆனால் மாலையில் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ‘முதல்வரும் துணை முதல்வரும் திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் வெளியூரில் இருக்க வேண்டியிருப்பதால் அமைச்சர்கள் பங்கேற்பார்கள்’ என்றார்.
இந்த விவகாரம் தமிழகம் முழுக்க அரசு மீது பெரும் அதிருப்தியை உருவாக்கியதால், இன்று அரசு தரப்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியூர் நிகழ்ச்சியில் இருப்பதால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்றும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.