முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கிணறு விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்பட்டதையடுத்து, கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள லெட்சுமிபுரம் ஊராட்சியில், மக்களின் நீர் ஆதாரமான ஊராட்சிக்கு சொந்தமான பொதுக் கிணறு வற்றிவிட்டது. இதற்கு, அருகில் உள்ள, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவிக்கு சொந்தமான இடத்தில் வெட்டப்பட்ட பெரிய அளவிலான கிணறுதான் இதற்கு காரணம் என ஊர்மக்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட கிணறை ஊராட்சி வசம் ஒப்படைக்கவும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
பல கட்ட போராட்டத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து கிராமக் கமிட்டி குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிணற்றை ஊராட்சிக்கு விற்பனை செய்வதாகக் கூறியவர், பின்னர் அவரது நண்பர் சுப்புராஜூக்கு விற்பனை செய்தார்.
இதனால் தொடர் போராட்டத்தை கிராம மக்கள் மீண்டும் தொடங்கினர். இதையடுத்து, ஊராட்சி வசம் ஒப்படைக்க ஓபிஎஸ் தரப்பு முடிவெடுத்ததால், பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி பத்திரப்பதிவு நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால், நடைபெறவில்லை.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட சென்ட் நிலங்களை லட்சுமி கிராம மக்களிடம் வருகிற திங்கள் கிழமை ஒப்படைக்கப்படும் என பன்னீர்செல்வம் தரப்பினர் உறுதியளித்துள்ளனர். கிணறு விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்பட்டதையடுத்து, கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.