சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து, தமிழகத்தில் இன்று முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகியுள்ளது.
சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் அண்மையில் நடந்தது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சாலை விதிமீறல்களை குறைக்கும் முயற்சியாக, வருகிற செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கையில் இருக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து, தமிழக போக்குவரத்து திட்டமிடுதல் பிரிவு கூடுதல் டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கையில், வாகன ஓட்டிகள் கட்டாயம் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், மோட்டார் வாகன சட்டப்படி ரூ.500 அபராதம் அல்லது 3 மாதம் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதேபோல், சென்னை காவல் ஆணையரும் அசல் ஓட்டுனர் உரிமம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்பதை எதிர்த்து, சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு முன்பு முறையிட்டார். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என கடந்த மாதம் 29-ஆம் தேதி உத்தரவிட்டது.
அதேபோல், அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்பதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி துரைசாமி, செப்டம்பர் 5-ம் தேதி வரை அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வுக்கு அனுப்பினார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் அமர்வு முன்பு கடந்த 4-ம் தேதி (நேற்று முன் தினம்) வந்தது. அப்போது, தனி நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை நீட்டிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அத்துடன் அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன் ஓட்டிகள் கையில் வைத்திருப்பது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகியுள்ளது.
அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.