ஆறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சாலை விதிமீறல்களை குறைக்கும் முயற்சியாக, வருகிற செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கையில் இருக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அண்மையில் தெரிவித்தார்.
இதனை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி துரைசாமி, செப்டம்பர் 5-ம் தேதி வரை அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வுக்கு அனுப்பினார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் அமர்வு முன்பு கடந்த 4-ம் தேதி (நேற்று முன் தினம்) வந்தது. அப்போது, தனி நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை நீட்டிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அத்துடன் அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன் ஓட்டிகள் கையில் வைத்திருப்பது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகியுள்ளது.
அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஆறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டால் மட்டுமே அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் குழு தெரிவித்துள்ளது. எனவே, அதன்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு பாரம் ஏற்றுதல், செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஒட்டுதல், என இந்த விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். அசல் ஓட்டுநர் உரிமத்தை சோதனை செய்வதற்காக தனியாக வாகன சோதனை நடைபெறப் போவதில்லை. வழக்கமான சோதனையே நடைபெறும். வாகன ஓட்டிகள் பயமின்றி பயணிக்கலாம் எனவும் காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.